தமிழக மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் அனைத்து நலவாழ்வுத் திட்டங்களும், தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுப்படுத்தியுள்ளதாக முதல் அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துளளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :–
தமிழகத்தில் உள்ள ஒருங்கிணைந்த அவசர தாய்-சேய் நல மையங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தி தாய்மார்கள் மரண விகிதம் மற்றும் சிசு மரண விகிதத்தை குறைக்கும் நோக்கத்துடன் முதல் அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழக மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் அரசு நலத் திட்டங்கள் அனைத்தும் இலங்கைத் தமிழர்களுக்கும் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் வாழும் அனைத்து இலங்கைத் தமிழர்களும் பயன்பெறும் வகையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை, முகாம்களில் வசிக்காது, உள்ளூர் காவல் நிலையங்களில் அகதிகளாக பதிவு செய்துள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுப்படுத்திட முதல்அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளதனால் 13,289 குடும்பங்களைச் சார்ந்த 34,826 இலங்கைத் தமிழர்கள் பயன் அடைவார்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
















