தமிழ் பேசும் மக்களுக்கு இந்த இனவாத அரசை வீழ்த்துவது மட்டும் போதாது. இதற்கு மாற்றாக உருவாகும் புதிய அரசு இனவாதம் அற்ற அரசாக இருக்க வேண்டும். இதற்கு அந்த அரசில் நமது கட்சி, பலம் வாய்ந்த கட்சியாக இடம் பெற வேண்டும்.
நாங்கள் ஆளுமையுடன் பலமாக இருந்தால்தான் எமது இனத்துக்கு எதிரான எந்த ஒரு அநீதியையும் தடுத்து நிறுத்தலாம். அதுபோல் எங்கள் மக்களுக்கு அனைத்து அரச வளங்களையும் கேட்டு வாங்கி வழங்கலாம் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலை வர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு கொச்சிக்கடை 95 ஆம் இலக்க தோட்டத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ்ர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
இந்த அரசை வீழ்த்த வேண்டிய வேளை வந்துவிட்டது. நாங்கள் வீழ்த்தாவிட்டாலும் கூட, இந்த அரசு தானாகவே வீழ்ந்து நொறுங்கும் அறிகுறிகள் தோன்றிவிட்டன. இது தான் இன்று நாடு முழுக்க வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்பு. இது இன்று கணிசமான சிங்கள மக்களின் எதிர்பார்ப்பாகவும் மாறி வருகிறது.
நமது கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி, ஜே.வி.பி, ஐக்கிய சமவுடமைக் கட்சி, நவநவ சமசமாஜக் கட்சி ஆகிய எதிரணிக் கட்சிகள் அனைத்தும் இந்தத் தேர்தலில் தனித்தனியாகவே போட்டியிடுகிறோம்.இதன் மூலம் ஒவ்வொரு கட்சியும் தத்தம் மக்கள் பலத்தை பரீட்சித்துத் தெரிந்து கொள்ளலாம்.
பொது எதிரணி தேவையில்லை
நாங்கள் இந்தத் தேர்தலில் எதிரணிக் கூட்டணி அமைப்போம் என்று இந்த அரசு மனப்பால் குடித்தது. தற்போது நடைபெறப் போவது ஒரு மாகாண சபை தேர்தல். இந் தத் தேர்தலில் ஒரு எதிரணிக் கூட்டணி அவசியமில்லை என்று இப்போது நாங்கள் முடிவுக்கு வந்துள்ளோம்.
நாங்கள் கூட்டணியாகப் போட்டியிட்டால், தனது அனைத்து அரச வளங்களையும், பலங்களையும் ஒன்று திரட்டிப் பயன்படுத்தி எமது கூட்டணியைத் தோற்கடிக்க இந்த அரசு எண்ணியது. அதற்காகத்தான் இந்த அரசு மாகாண சபை தேர்தல்களை ஒரேயடியாக நடத்தாமல், கட்டம் கட்டமாக நடத்துகிறது.
ஒரிரு மாகாணங்களில் நடைபெறும் தேர்தல்களில் எதிரணிக் கூட்டணியை தோற்கடித்து விட்டால் இனி ஒரு 10 வருடத்துக்கு எதிர்க்கட்சிக் கூட்டணி பற்றி மக்கள் பேசமாட்டார்கள் என்று அரசு கனவு கண்டது. இப்போது அது நடக்கவில்லை.
தேர்தலின் பின்னர் எதிரணிக் கூட்டமைப்பு
இந்தத் தேர்தலுக்குப் பிறகு அனைத்து எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கிய பெரிய எதிரணிக் கூட்டணி உருவாகும். அந்த கூட்டணியே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலையும், நாடாளுமன்றத் தேர்தலையும் சந்திக்க வேண்டும்.
ஆனால், தமிழ் பேசும் மக்களுக்கு இந்த இனவாத அரசை வீழ்த்துவது மட்டும் போதாது. இதற்கு மாற்றாக உருவாகும் புதிய அரசு இனவாதம் அற்ற அரசாக இருக்க வேண்டும். இதற்கு அந்த அரசில் நமது கட்சி, பலம் வாய்ந்த கட்சியாக இடம்பெற வேண்டும்.
நாங்கள் ஆளுமையுடன் பலமாக இருந்தால்தான் எமது இனத்துக்கு எதிரான எந்த ஒரு அநீதியையும் தடுத்து நிறுத்தலாம். அதுபோல் எங்கள் மக்களுக்கு அனைத்து அரச வளங்களையும் கேட்டு வாங்கி வழங்கலாம்.
நான் யாருக்கும் அடிமையில்லை
என்னை யாரும் மிரட்ட முடியாது. என்னை யாரும் விலைக்கு வாங்கவும் முடியாது. நான் மஹிந்த ராஜபக்சவுடனும், ரணில் விக்கிரமசிங்கவுடனும் சமமாக அமர்ந்து பேசி எமது மக்களின் எதிர் பார்ப்புகளை ஈடுசெய்ய நினைப்பவன். என்னால் இவர்களிடம் சென்று மண்டியிட்டுக் கெஞ்சிக் கூத்தாட முடியாது.
நான் தன்மானம் உள்ளவன். நமது இனம் இந்த நாட்டில் கொழும்பிலும், வடக்கிலும், கிழக்கிலும், மலைநாட்டிலும் சமத்துமாக நடத்தப்படவேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. இதற்குத் தலைநகரத் தமிழ் மக்கள் என் கரங்களை பலப்படுத்த வேண்டும்.
நான் இதுவரை அரசு அதிகாரத்தைத் தேடி ஓடவில்லை. அது என்னைத் தேடி பலமுறை வந்தது. ஆனால் நான், வாக்களித்த மக்களை விற்றுச் சாப்பிடும் அரசியல் வியாபாரி அல்ல – என்றார் அவர்.
இந்தச் சந்திப்பில், முன்னணியின் சிரேஷ்ட உபதலைவர் வேலணை வேணியன், நிர்வாகச் செயலாளர் பிரியானி குணரத்ன, மகளிர் இணைய செயலாளர் நந்தினி விஜேரத்னம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
















