ஜெனிவாச் சமர் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள சூழ்நிலையில், யாழ்ப்பாணத்துக்குக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வருகை தந்திருந்த அமெரிக்கத் தூதுவர், வடக்கு முதலமைச்சர் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்களை இரகசியமாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக வெளியில் எதுவும் தெரிவிக்கப்படக் கூடாதென்றும் அமெரிக்கத் தூதுவர் அழுத்தமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் கூறியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை, நாகர் கோவிலில் இடம்பெற்ற உதவி வழங்கும் நிகழ்வில் பங்கெடுப்பதற்காக அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே.சிசன் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தனர்.
முன்னதாக புதன்கிழமை இரவு சுன்னாகத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று உறுப்பினர்களை அமெரிக்கத் தூதுவர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். சுமார் ஒன்றரை மணிநேரத்துக்கும் மேலாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்புத் தொடர்பில் வெளியில் எந்தவொரு தகவலும் வழங்கப்படக் கூடாதென்று அமெரிக்கத் தூதுவர் குறித்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.
வடக்கு மாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரனுக்குப் புனர்வாழ்வு வழங்கப்படவேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளமை தொடர்பாகக் குறித்த சந்திப்பில் அமெரிக்கத் தூதுவரால் ஆராயப்பட்டுள்ளது.
மேலும் ஜெனிவாவில் இடம் பெறும் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா வால் கடுமையான பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என்று இந்தச் சந்திப்பில் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஜெனிவா அமர்வில் யார் பங்குகொள்ளப் போகின்றனர் என்றும் அவர் இதன்போது கேள்வியெழுப்பியுள்ளார்.
அதற்குச் சந்திப்பில் கலந்து கொண்டவர்களால், நாடாளு மன்ற உறுப்பினர்கள் எம்.ஏ. சுமந்திரன், மாவை. சேனாதிராஜா மற்றும் ஒரு சில உறுப்பினர்களும், வடக்கு மாகாண சபையின் முஸ்லிம் உறுப்பினர் ஒருவரும் பங்குகொள்வார் எனவும் கூறப்பட்டதாக அறியமுடிகின்றது.
















