இலங்கைக்கு எதிராக ஐ.நா வில் கடுமையான பிரேரணை கொண்டு வரப்படவுள்ளமை தொடர்பில், இலங்கை அரசுக்கு, அமெரிக்கா உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.
மூன்றாவது தடவையாகப் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளமை தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே.சிசன் தமக்குத் தெரியப்படுத்தியுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு உறு திப்படுத்தியுள்ளார்.
இலங்கைக்கு எதிராக கடந்த 2012, 2013 ஆம் ஆண்டுகளில் ஐ.நா மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா இரண்டு தீர்மானங்களை கொண்டு வந்து நிறைவேற்றியிருந்தது.
இவை குறித்து இலங்கை அரசு உரிய கவனம் செலுத்தாத நிலையில், இந்த ஆண்டு மனித உரிமைகள் சபையில் மூன்றாவது தடவையாகவும் காட்டமான பிரேரணை ஒன்றைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனை இலங்கைக்கு அமெரிக்கா தெரியப்படுத்தியதாக வெளிவிவகார அமைச்சர் தனது தகவலில் வெளியிட்டுள்ளார். அமெரிக்கத் தூதுவர் சிசன், இந்த மாதம் முதல் வாரத்தில் தமக்குத் இதனைத் தெரியப்படுத்தியதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்த அறிவிப்பை அடுத்தே இலங்கை அரசு ஜெனிவாவில் தமக்கு ஆதரவு தேடும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















