இலங்கையில் 2012 ஆம் ஆண்டின் இறுதியிலும் 2013 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் விண்கற்கள் விழுந்த இடத்தை வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாக பாதுகாக்குமாறு விஞ்ஞானி கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரிட்டன் விஞ்ஞா னியான சந்திரா விக்ரமசிங்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து அதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அதனையடுத்து பொலநறுவையை அண்டிய அரலகங்வில பிரதேசம் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடமாக பாதுகாக்க உடனடி நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுத்துள்ளார் என்று விஞ்ஞானி சந்திரா விக்கிரமசிங்க தெரிவித்தார்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் இலங்கையில் கிடைத்த விண்கற்கள், பூமியை கடந்தும் உயிர்கள் வாழக் கூடும் என்பதற்கு நிரூபணம் என்று சந்திரா விக்கிரமசிங்க கூறினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
அரலகங்வில என்ற கிராமத்தில் விவசாயிகள் கண்டெடுத்திருந்த கற்களை நாங்கள் ஆய்வுக்குட்படுத்தி இருந்தோம்.
ஆனால் ஆரம்பத்தில் அவை வழமையான விண்கற்களுக்குரிய அடிப்படை தகைமைகளைக் கொண்டிருக்கவில்லை என்று கருதப்பட்டதால் பேராதனை பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மட்டுமன்றி எங்களாலும் அவை விண்கற்கள் தான் என்பதை ஏற்றுக்கொள்வதில் பிரச்சினைகள் இருந்தன.
அவை ஏற்கனவே கிடைத்திருக்கின்ற விண்கற்களைவிட முற்றிலும் வேறுபட்டு இருந்தமையால் தான் இந்தச் சந்தேகம் வந்திருந்தது.
ஆனால் அமெரிக்காவிலும் ஜப்பானிலும் நடத்தப்பட்ட உயர் ரக இரசாயன ஆய்வுகளின் முடிவில் இவை உண்மையில் விண்கற்கள் தான் என்பது உறுதியாகிவிட்டது.
இலங்கையில் கிடைத்த இந்த விண்கற்கள் முன்னெப்போதும் வழங்காத, இன்னொரு புதிய வரலாற்று திருப்பு முனையான தகவலையும் தந்திருக்கிறது. இந்த விண்கற்களில் நுண்ணுயிர் படிமங்கள் இருப்பது வாதப்பிரதிவாதங்கள் இன்றி உறுதியாகியிருந்தது.
இந்த விண்கற்கள் வானிலிருந்து விழுந்தவை தான் என்பதிலும் சந்தேகம் ஏதுமில்லை. அதில் நுண்ணுயிர் படிமங்கள் இருந்தன என்பதிலும் சந்தேகமில்லை.
உயிர் என்பது பூமிக்குள் மட்டும் அகப்பட்டது என்கின்ற கோட்பாடுகளுக்கு மாறான வாதத்துக்கு இலங்கையில் கிடைத்த விண்கற்கள் ஆதாரமாக அமைகின்றன.
அதனாலேயே, குறித்த விண்கற்கள் கிடைத்த அரலகங்வில பிரதேசத்தை பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக அறிவிக்கும்படி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது – என்றார்.
















