இலங்கைக்கு எதிரான ஜெனிவா பிரேரணைக்கு சர்வதேச ஆதரவு திரட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொறிமுறை குறித்து தாம் அலட்டிக்கொள்ளப் போவதில்லை என இலங்கை அரசு நேற்று தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் குறித்து தமக்கு ஏற்கனவே தெரியும் என்றும் ஜெனிவாவில் எத்தடை வரினும் அதை சமாளிக்க தயார் என்றும் அரசு சூளுரைத்தது.
தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்றுமுன்தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணைக்கு சர்வதேசத்தினர் ஆதரவு அளிக்க வேண்டும் என்று சம்பந்தன் உரை நிகழ்த்தியிருந்தார்.
இவரின் இக்கருத்து குறித்து அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெலவிடம் வினவியபோதே அவர், இந்த விடயம் குறித்து அலட்டிக் கொள்ளவில்லை எனப்பதிலளித்திருந்தார்.
அத்தோடு, சம்பந்தன் இவ்வாறான கருத்தைத் தெரிவிப்பார் என்று அரசு ஏற்கனவே ஊகித்து விட்டது. எப்படியும் கூட்டமைப்பு அரசுக்கு எதிராகவே செயற்படும் என எமக்கு ஏற்கனவே தெரியும். நினைத்தது போலவே சம்பந்தனும் தற்போது கருத்து வெளியிட்டுள்ளார்.
ஆனால், அரசு இவரின் இக்கருத்து குறித்து அரசு ஒருபோதும் அலட்டிக் கொள்ளப்போவதில்லை. அவ்வாறு அலட்டிக்கொள்வதற்கான அவசியமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது அமெரிக்கா ஐ.நா கூட்டத்தொடரில் கொண்டுவரவுள்ள பிரேணைக்கு பிரிட்டனும், அமெரிக்காவும் சர்வதேசத்திடமிருந்து ஆதரவு திரட்டிக் கொண்டு வருகின்றமை குறித்து வினவிய போது,
மார்ச் மாத ஜெனிவாக் கூட்டத் தொடரில் அமெரிக்கா, இலங்கை அரசுக்கு எதிராகக் கொண்டுவரவுள்ள பிரேரணை குறித்து அரசு அஞ்சப் போவதில்லை. இதை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்ற வியூகத்தை வகுப்பதில் அரசு இப்போதே ஆயத்தமாகி விட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஜெனிவாக் கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு ஆதரவு திரட்டும் பணிக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு கடந்த வாரம் விஜயம் செய்திருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
















