இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் சில வெளிநாட்டு இராஜதந்திரிகள் தலையீடு செய்கின்றனர் என்று பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
கொழும்பில் ஹில்டன் விடுதியில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
இலங்கையைத் தமது நிகழ்ச்சி நிரலின் கீழ் கொண்டு வருவதற்கு அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி முயற்சிக்கிறது. போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கில் அதிகளவு படை முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன. உயர் பாதுகாப்பு வலயங்கள் சுருக்கப்பட்டுள்ளன.
தேசிய பாதுகாப்புக்குத் தேவையான கேந்திர முக்கியத்துவமிக்க இடங்களில் மட்டுமே தற்போது வடக்கில் படையினர் நிலை கொண்டுள்ளனர். வடக்கில் சட்டம் ஒழுங்கை முழுமையாக பொலிஸாரே கவனித்துக் கொள்கின்றனர்.
இதற்கென வடக்கு, கிழக்கில் புதிய பொலிஸ் நிலையங்கள் திறக்கப்பட்டு, தமிழ்பேசும் பொலிஸாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்த காலத்தில் இழக்கப்பட்ட வாய்ப்புகளை இலங்கை இப்போது மீளப்பெற்று வருகிறது.
போருக்குப் பின்னர், குறிப்பிடத்தக்களவு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி தனது நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கையை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
சிலர் அரசின் பெயரைக் கெடுக்க முனைகின்றனர். பிரச்சினைகளை நியாயமாகத் தீர்க்க விரும்பினால் அவர்கள், எமது பிரச்சினைகளை அனைத்துலக கவனத்துக்கு கொண்டு செல்லாமல் உள்நாட்டு செயல் முறைகளின் மூலம் தீர்ப்பதற்கு அரசுடன் கலந்துரையாட வேண்டும்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் ஒரு பகுதி நிறைவேற்றப்பட்டுள்ளன. வடக்கில் முழுமையான அமைதி நிலை நாட்டப்பட்டுள்ளது – என்றார்.
















