இங்கிலாந்து நாட்டில் இயங்கிவரும் ´வர்ஜின் காலக்டிக்´ என்ற நிறுவனம் விண்வெளி சுற்றுப்பயணத்திற்குப் பயணிகளை அனுப்பும் பணியைச் செய்துவருகின்றது.
ஆனால் இந்த நிறுவனத்தின் பயணங்களில் பங்குகொள்ள சீனர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சீனர்கள் ராக்கெட் தொழில்நுட்பத்தைத் திருடிவிடக்கூடும் என்ற அச்சமே இதற்குக் காரணமாகக் குறிப்பிடப்படுகின்றது.
லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும்போதிலும் இந்த நிறுவனத்தின் ராக்கெட்டுகள் அமெரிக்க ஏவுகணைத் தளத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
இந்த ராக்கெட் எஞ்சின்கள் இராணுவத் தொழில்நுட்பத்தை ஒத்திருப்பதாலும், அமெரிக்காவின் சர்வதேசப் போக்குவரத்துத் தளத்திலிருந்து செயல்படுத்தப்படுவதாலும் இவை ஆயுதக் கட்டுப்பாடுகள் விதிமுறையின் கீழ் வருகின்றன.
அமெரிக்காவில் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததிலிருந்து கடந்த 1990 ஆம் ஆண்டு வரை ரஷ்யாவுடனான பனிப்போர் தொடர்ந்து வந்தது.
அந்த காலத்தில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட கடுமையான எதிர்ப்பு உளவு கட்டுப்பாடுகள் இன்னும் அங்கு தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதனால் சீனா, ஈரான் மற்றும் வடகொரியா போன்ற நாடுகளின் குடிமக்களுக்கு அங்கு சலுகைகள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன.
எனவே தடை செய்யப்பட்ட இத்தகைய நாடுகளிலிருந்து மக்கள் இந்த விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ள முடியாது என்று பிரிட்டிஷ் நிறுவனம் குறிப்பிடுகின்றது.
விண்வெளிப் பயணம் குறித்து சீனாவிலிருந்து விசாரிப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும்போதிலும் அவர்களிடம் சீனப் கடவுச்சீட்டுகள் மட்டுமே இருக்கும்பட்சத்தில் எங்களால் ஒப்புக்கொள்ள முடியாது.
அவ்வாறு இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றவர்கள் வேறு ஏதேனும் ஒரு நாட்டின் தேசிய கடவுசீட்டையோ அல்லது அமெரிக்காவின் குடியுரிமையை அளிக்கக்கூடிய கிரீன் கார்டையோ பெறவேண்டும் என்று ஹாங்காங்கிலிருந்து செயல்பட்டுவரும் இந்நிறுவனத்தின் விற்பனையாளர் கூறுகின்றார்.
பல கோடீஸ்வர சீனர்கள் இந்த விண்வெளிப் பயணத்திற்கான டிக்கெட் விலையை (2,50,000 அமெரிக்க டாலர்) எளிதில் தரக்கூடிய வர்த்தக சந்தை வாய்ப்பை இந்தக் கட்டுப்பாடுகளால் வர்ஜின் காலக்டிக் நிறுவனம் இழக்கக்கூடும். எனினும் இதனை ஏற்றுக்கொண்டால் வேறுவிதமான பிரச்சினைகளுக்கு அவர்கள் ஆளாகக்கூடும் என்று தகவல்கள் குறிப்பிடுகின்றன.
















