இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் அவசியமானது என பிரித்தானிய தொழிற்கட்சி அறிவித்துள்ளது. மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரித்தானியாவின் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி கோரியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென தொழிற்கட்சித் தலைவர் ஈட் மில்லிபான்ட் தெரிவத்துள்ளார். சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுமாறு பிரித்தானிய அரசாங்கத்தை வலியுறுத்த உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் நம்பகமான ஓர் பொறிமுறைமயை இலங்கை அரசாங்கம் உருவாக்கத் தவறினால் சர்வதேச விசாரணைகளை வலியுறுத்த வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.பிரித்தானிய தமிழர் பேரவைஇ உலகத் தமிழர் பேரவை மற்றும் தமி;ழ்ஸ் போ லேபர் போன்ற பிரித்தானிய வாழ் தமிழ் அமைப்புக்களைச் சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென இலங்கை அரசாங்கதை வலியுறுத்தமாறு பிரித்தானிய அரசாங்கத்திடம் கோருவதாக மி;ல்லிபான்ட் தெரிவித்துள்ளார்.
















