இருதய நோயின் பிடியிலிருந்து நழுவி நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ வேண்டுமா?

herzinfarktஆரோக்கிய மற்றதும் அதிக கொழுப்பு நிறைந்ததுமான உணவு வகைகள், உடல் அசைவில் பற்றாக்குறை, புகைத்தல், தூக்கமின்மை Stress எனப்படும் அழுத்தம் போன்றவை இருதய நோய்க்குக் காரணமாகின்றன எனப் பொதுவான அபிப்பிராயமுண்டு. ஆனால் பலகுடும்பங்கள் மத்தியில் நடாத்தப்பட்ட உலகம் தழுவிய ஆராய்ச்சிகளின் மூலம் குறைத்துக் கணக்கிட முடியாத பிறிதொரு காரணி உண்டு என்றும், இது இருதய நோய் தோன்றும் நிலையைப் பதினைந்து வீதத்தால் அதிகரிக்கச் செய்கிறதெனவும் கண்டு கொள்ளப்பட்டுள்ளது.

இருதயத் தசைகளுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகளில் (Coronary artery) ஏற்படும் அடைப்பு இருதய செயலிழப்பிற்கும் மரணம் சம்பவிப்பதற்கும் காரணமாகிறது. இதையே இருதயம் தாக்கப்படுதல் எனும் பொருளில் ஆங்கிலம் Heart attack என்று அழைக்கும். ஆரம்பத்தில் கூறப்பட்ட தவறான வாழ்க்கை முறையால் இரத்தத்தில் தோற்றம் பெற்ற வாழ்வியலிற்குத் தகாத கொழுப்பு தமனிகளின் உட்புறச் சுவரில் படிந்து சிதைவை ஏற்படுத்தி விடுகிறது.

இச் சிதைவை சீர் செய்யும் முகமாக இரத்தக்கட்டி தோன்றி சிதைந்த இடத்தில் படிகிறது.. இப்படியாகத் தோற்றம் பெற்று தமனியின் உட்பரப்பில் தொடர்ந்து படிந்த இரத்தக் கட்டிகள் தமனியில் அடைப்பை ஏற்படுத்தி விடுகின்றது. இதனால் இருதய தசைகளுக்குச் செல்லும் இரத்தம் தடை செய்யப்பட்டு இருதய வியாதி ஏற்படுகிறது.

ஆனால் பல குடும்பங்களின் மத்தியில் நடாத்தப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம், மரபணுச் சிதைவு இருதய நோய்களுக்குப் பதினைந்து வீத காரணியாகிறதெனவும் கண்டு கொள்ளப்பட்டுள்ளது. பழைய கலங்களிலிருந்து புதிய கலங்களுக்கு மரபணுச் செய்திகள் பதியப்படும் போது, அவற்றின் வரிசைக் கிரமத்தில், ஒழுங்கற்ற மாறுபட்ட நிலை ஏற்படுதலை மரபனுச் சிதைவு என்பர்.

இது தவறான வாழ்க்கை முறைகள் பகரும் உடலியற் குழப்பங்களாலும், எரிந்த உணவு வகைகளில் காணப்படும் கார்பன் மூலக் கூறுகளாலும், அணுக்கதிர் வீச்சுக்களாலும் இன்னும் பல காரணங்களாலும் நடைபெறுகிறது இந்த மரபணுச்சிதைவு பல சந்ததியினருக்குக் கடத்தப்படுகின்றது. மரபணுவானது மாற்றத்திற்கு உள்ளாகும் சக்தி கொண்டது. மரபணு மாற்றத்தை Mutation என்பர்.

ஒவ்வொரு மனித உடலிலும் 2000 வகையிலான மரபணுச் சிதைவுகள் காணப்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இதில் ஒரு சில மட்டும் நோய்களுக்குக் காரணமாகி விடுகின்றது. நவீன தொழில் நுட்பத்தின் துணையால் இன்றைய உலகில் மரபணுப் பரிசோதனைகள் நடாத்தப்பட்டு அவற்றின் இரகசிய மொழியிலுள்ள (Code) செய்திகள் அறியப்பட்டு, தோன்றப் போகும் நோய்களுக்கான தடுப்பு முறைகள் மருத்துவ உலகை அலங்கரித்து வருகின்றது.

இருதய நோய் தோன்றுவதற்கன மரபணுச்சிதைவு பரிசோதனைகள் மூலம் அறியப்படின், வாழ்க்கை முறைகளை மாற்றியமைத்தும், உடற் பயிற்சியில் அதிக அக்கறை செலுத்தியும், இரத்தம் கட்டியாவதைத் தடுக்க வல்ல மருந்து வகைகளைத் தேவைப்படின் உபயோகித்தும் வரின் இருதய நோயின் பிடியிலிருந்து நழுவி நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழலாம். இது போன்று புற்றுநோய், பக்கவாதம் போன்ற நோய்களும் தடுக்கப் படலாம்.

கறை பட்ட வேறு நம்பிக்கைகளில் நேரத்தைக் கடத்தாது, இருதய வலி கண்டவர்களும் பரம்பரையில் இருதய நோய் உள்ளவர்களும் வைத்தியரை நாடுதல் அவசியமென்றும், பதினெட்டு வயதின்பின் சகலரும் மரபணுப் பரிசோதனையைத் தேவைப்படின் செய்துகொள்ளலாம் என்பதும் அறிந்து கொள்ள வேண்டிய அறிவியல் உண்மையாகும்.

-மகேந்தி

Tags: , ,

Leave a Reply