இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குத் தேவையான நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க, அது தொடர்பில் இறுக்கமான தீர்மானம் இயற்றக்கூடிய தளம் ஐ.நாவின் பாதுகாப்புச் சபையே என்று ஐ.நா. முன்னாள் உதவிப் பொதுச் செயலாளர் டெனிஸ் கலிடே தெரிவித்துள்ளார்.
தமிழர் தாயகத்தில் தமிழர்களின் பூர்வீக நில அபகரிப்புக்கு எதிரான மாநாடு பிரிட்டனில் ஆரம்பமாகியது.பிரிட்டன் நாடாளுமன்றத்தில் 14 ஆம் இலக்க அறையில் லண்டன் நேரப்படி நேற்றுக் காலை 10 மணிக்கு இந்த மாநாடு ஆரம் பமாகித் தொடர்ந்து நடை பெற்று வருகின்றது.
பிரிட்டன் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் ஆரம்பமான நிகழ்வில் தாயகத்திலிருந்து தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோர் இணைந்து கொண்டு தமது பங்களிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முதல் நிகழ்வாகத் தாயகத்தில் இன்னுயிர் நீர்த்த எமது உறவுகளுக்கு ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் பின்னர் ஆரம்ப உரையை, பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவோன் மற்றும் லீஸ்கொட் ஆகியோர் நிகழ்த்தினர்.
இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த ஐ.நா. சபையின் முன்னாள் உதவிப் பொதுச் செயலாளர் டெனிஸ் கலிடே, இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு தொடர்பிலும் அதனைத் தொடர்ந்தும் அங்கு தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் சம்பவங்கள் குறித்தும் தாம் கண்ட அனுபவங்கள் மற்றும் ஆதாரங்களைச் சபையில் எடுத்துரைத்தார்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குத் தேவையான நியாயத்தை எடுத்துரைக்கத் தகுந்த மற்றும் அது தொடர்பில் இறுக்கமான தீர்மானம் இயற்றக் கூடிய தளமாக ஐ.நாவின் பாதுகாப்புச் சபையே உள்ளது. அன்றேல் தனிப்பட்ட முறையில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீன் மூனுக்கு அதிகாரம் இல்லை. அவர் ஒரு ஊழியர் மாத்திரமே என்று குறிப்பிட்டார்.
போர்க் குற்ற ஆதாரங்கள் உண்டு
இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த, சிட்னி பல்கலைக் கழகத்தின் சமாதானக் கற்கைநெறிகளுக்கான இயக்குனர் பேராசிரியர் ஜேக்லின்ச், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியதுடன் சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களும் இலங்கை அரசுக்கு எதிரான குரலை அதிகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
விக்கிலீக்ஸின் இலங்கை குறித்த ஆதாரத்தை மேற்கோள் காட்டிய அவர்; இலங்கையில் அமெரிக்கத் தூதரக இரகசிய ஆவணம் ஒன்றின் அடிப்படையில் கிடைக்கப் பெற்ற செய்மதி ஒளிப்படத்தின் அடிப்படையில் இறுதிப் போரின் போது தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு மற்றும் போர்க் குற்றம் தொடர்பிலும் தெளிவான ஆதாரங்கள் வெளியிடப்பட்டிருந்ததையும் சுட்டிக்காட்டினார்.
இது மறுக்கவோ எவராலும் மறைக்கவோ முடியாத ஒரு ஆதாரமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
















