இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணையை இந்தியா ஆதரிக்கப் போவதும் இல்லை, எதிர்க்கப் போவதுமில்லை. மாறாக நீர்த்துப் போகச் செய்யும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பான விசாரணைகளை நடத்த அமெரிக்காவோஇ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ குழுவை நியமிக்க முடியாது? இதனை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பல மாதங்களாக எமக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் பிரேரணையை கொண்டு வருவதற்கு அமெரிக்கா முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது என அவர் சுட்டிக்காட்டியதுடன், இதனை முழு உலகமே அறியும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் அமெரிக்காவுக்கும் கூட்டமைப்புக்கும் திருப்தியளிக்கக்கூடிய விசாரணைகளே தேவையென்கின்றனர். இதற்காக சர்வதேச விசாரணையை கோருகின்றனர் என்றார்.
அவ்வாறானால் அவர்களது பிரதிநிதிகளையே விசாரணை குழுவில் நியமிக்க வேண்டும். இதனை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது பிரச்சினை தொடர்பாக உள்நாட்டு விசாரணையே தேவை. அதற்கான நிபுணர்கள் எம்மிடம் உள்ளனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திறந்த மனதுடன் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தார். அதற்கமைய தற்போது அக்குழுவின் பரிந்துரைகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்றார்.
30 வருட கால யுத்தம் இடம்பெற்ற நாடு. எனவே ஒரேநாளில் அல்லது ஒரு வருடத்தில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு விட முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் ஐ. நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு வரும் பிரேரணையை இந்தியா ஆதரிக்கப் போவதும் இல்லை எதிர்க்கப் போவதுமில்லை எனத் தெரிவித்தார்.
ஆனால் கடந்த ஆண்டைப் போன்று எமக்கெதிரான பிரேரணையின் கடுமைத் தன்மையை நீர்த்துப் போகச் செய்வதற்கு முழுமையான ஆதரவை வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
















