இந்திய இராஜதந்திரி தேவ்யாணி கோப்பர்கடே அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான புகைப்படங்களை ஆதாரமற்றவை என்றும் அடிப்படையற்றவை என்றும் தெரிவித்த அமெரிக்க செனல் 4 வெளியிட்ட ஆவணங்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு மாறுபட்டு செயற்படுகின்றமையானது அதன் இரட்டை நிலைப்பாட்டை வெளிக்காட்டி நிற்கின்றது. அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை சர்வதேசம் உணர்வதற்கு இது சிறந்த ஆதாரமாகும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நேற்று சபையில் தெரிவித்தார்.
இலங்கை மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலானதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை அமர்வின் போது இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசியக்கட்சி எம்.பி.யான ரவி கருணாநாயக்கவினால் எழுப்பப்பட்டிருந்த செனல் 4 தொடர்பான கேள்விக்கும் இடைக் கேள்விகளுக்கும் பதிலளிக்கையிலேயே அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இலங்கைக்கு எதிராக பல்வேறு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பிரித்தானிய தொலைக்காட்சியான செனல் 4 நிறுவனம் இலங்கைக்கு எதிராக மேற்கண்ட நடவடிக்கைகள் புதுமையானவை அல்ல.
இலங்கையின் முக்கிய தருணங்களின் போதெல்லாம் செனல் 4 நிறுவனம் தனது செயற்பாட்டினை முன்னெடுத்திருக்கின்றது. பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக்கை நான் சந்திக்கவிருந்த சந்தர்ப்பத்தில் செனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் தனது முதலாவது வீடியோ ஆவணப்படத்தை வெளியிட்டது.
அதேபோன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றவிருந்த சந்தர்ப்பத்தில் மற்றுமொரு வீடியோ வெளியிடப்பட்டது. இவ்வாறு இலங்கை சார்பிலான முக்கிய சந்தர்ப்பங்களின்போது இவ்வாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இவை அரசியல் தேவை கருதிய செயற்பாடாகும்
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் செனல் 4 விவகாரம் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. செனல் 4 மட்டுமல்லாது பல்வேறு நிறுவனங்களுக்கும் இது குறித்து தெளிவுபடுத்தியிருக்கின்றோம்.
அல் ஜஸீரா, பி.பி.சி உள்ளிட்ட செய்திச்சேவை நிறுவனங்களினூடாக நேர் காணல்களின் மூலம் எமது நிலைப்பாடுகளை தெரியப்படுத்தியும் தெளிவுபடுத்தியும் இருக்கின்றோம்
இதேவேளை, இலங்கை தொடர்பான ஆவணப்படத்தை தயாரித்த கெலும் மெக்ரேவுடன் எமது பிரித்தானிய உயர்ஸ்தானிகர் நேரடியாக சந்திப்பினை ஏற்படுத்தி இலங்கை தொடர்பான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியிருந்தார். இதேபோன்று பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிவிவகார அமைச்சர், அந்நாட்டுப் புத்திஜீவிகள் ஆகிய தரப்பினருக்கு இது குறித்த தெளிவுபடுத்தல்களை வழங்கியுள்ள அதேவேளை, கன்சர்வேட்டிவ் கட்சியின் வருடாந்த மாநாட்டிலும் எமது எடுத்துக்கூறல்களை முன்வைத்திருந்தோம்.
எப்படி இருப்பினும் இலங்கைக்கு எதிராக பல்வேறு பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மனித உரிமை விவகாரம் அரசியல் நிகழ்ச்சி நிரலாக மாற்றியமைக்கப்பட்ட வகையில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் அது இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டு செயற்பட்டு வருகின்றது.
அண்மையில் இந்தியாவில் இராஜதந்திரியான தேவ்யாணி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அவரது கைது தொடர்பான புகைப்பட ஆதாரங்கள் இணையத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகியிருந்தன.
எனினும், இவ்வாறு வெளிவந்த ஆதாரங்கள் அடிப்படையற்றவை என்றும் அவை உண்மைக்குப் புறம்பானவை என்றும் போலியானவை என்றும் ஆகவே அத்தகைய ஆதாரங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அமெரிக்கா கூறியது.
எனினும் இலங்கை தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட படங்கள் தொடர்பில் அமெரிக்கா முற்றிலும் மாறுபட்டே செயற்படுகின்றது.
அமெரிக்காவைப் பொறுத்த வரையில் செனல் 4 ஆவணப் படங்களை வைத்து அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டு வருகின்றது.
தேவ்யாணியின் கைது விடயத்தில் வெளியான படங்கள் தொடர்பிலும் செனல் 4 வினால் வெளியிடப்பட்ட படங்கள் தொடர்பிலும் அமெரிக்கா கொண்டிருக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழான இரட்டை நிலைப்பாட்டினை சர்வதேசமும் உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது இது தகுந்த ஆதாரமாகவும் உள்ளது என்றார்.
இதேவேளை, செனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இலங்கைக்கு எதிராக மேற்கொண்ட பிரசாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் சீர் செய்தல் நடவடிக்கையாக பிரித்தானியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, இந்தியா, அமெரிக்கா,
சுவிற்ஸர்லாந்து, நோர்வே, சுவீடன், மலேசியா உள்ளிட்ட நாடுகளின் இலங்கைத் தூதுவர்கள் உயர்ஸ்தானிகர்களால் மேற்கொள்ளப்பட்ட வெளிப்படுத்தல்கள் பற்றிய விபரங்களை அமைச்சர் பீரிஸ் சபையில் ஆற்றுப்படுத்தினார்.
















