போர்க்குற்ற விசாரணை நடத்தும் அக்கறை மஹிந்தவுக்கு இல்லை; நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை குற்றச்சாட்டு

new-york-times-logoஇலங்கையின் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தும் அக்கறை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­சவுக்கு கிடையாது என நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்தப் பத்திரிகை எழுதியுள்ள ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக மஹிந்த அரசு மேற்கொண்டு வரும் அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. எனினும் அந்தக் குற்றச்சாட்டுக்களை ஏற்பதற்கு அரசு தயாராக இல்லை.

இரத்தக்களரியான இறுதிப் போரின் கடைசிக் கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமைகள் மீறல் குறித்துக் கண்டறிய நம்பிக்கையானதும் சுயாதீனமானதுமான விசாரணை ஒன்றை ஆரம்பிக்குமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா மீண்டும் முயற்சித்து வருகிறது.

இது குறித்து அரச அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகத்துடன் கலந்துரையாடல்களை நடத்த அமெரிக்க அரசின் மூத்த பிரதி நிதியை இலங்கைக்கு அனுப்பி வைத்தமை காலத்திற்கு ஏற்ற செயற்பாடாகும்.

ஐ.நா. சபை செயலர் பான் கீ மூன் நியமித்த ஆணைக்குழுவின் அறிக்கையில், இலங் கையின் இறுதிப் போரில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் எனச் சுட்டிக்காட் டப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்களில் அதிகளவானோர் அரசின் எறிகணைத் தாக்குதல்களிலேயே கொல்லப்பட்டுள்ளனர். எனினும் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இலங்கை அரசுதவறியுள்ளது. இது மாத்திரமின்றி அந்த விடயம் தொடர்பில் சர்வதேச சமூகம் எடுக்கும் எந்த முயற்சிகளுக்கும் இலங்கை அரசு ஒத்துழைப்பதாக இல்லை.

அரச படையினரும், விடுதலைப் புலிகளும் மேற்கொண்ட போர்க்குற்றங்களைக் கண்ட றிய விசாரணைகளை நடத்துமாறுகோரி ஐ.நா. மனித உரிமைகள் சபை இதுவரை இரண்டு யோசனைகளை முன்வைத்தது. ஆனால் இந்த இரண்டு யோசனைகளையும் இலங்கை அரசு புறந்தள்ளியுள்ளது. இந்த நிலையில் மூன்றாவது தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் இலங்கைக்குப் பயணம் செய்துள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்தது.

சர்வதேச அழுத்தங்கள் காரணமாக உள்நாட்டில் சில முன்னேற்ற நடவடிக்கைகள் இலங்கை அரசு எடுத்திருப்பதை அறிய முடிகிறது. குறிப்பாக பல வருடங்களாக அரசி னால் புறக்கணிக்கப்பட்டு வந்த, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாண சபைக்கு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த வகையில் மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசு சர்வதேசத்துக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு உள்ளது. அதற்கு ஒத்துழைக்க வேண்டியது அந்த அரசின் கட்டாயமாகும்- என்றுள்ளது.

Tags: ,

Leave a Reply