ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் பேரவையில், இலங்கைக்கு ஆதரவு வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமை கூட்டத்தொடரில் அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு தீர்மானம் கொண்டுவரப்படும் இடத்து இலங்கைக்கே தாம் ஆதரவு வழங்குவோம் என சீனா அறிவித்துள்ளது.
சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் சீன வெளிவிவகார அமைச்சரை பெய்ஜிங்கில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தினார். அதன்போதே சீனாவின் வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
மனிதஉரிமை விவகாரங்களை வைத்து இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில், சில நாடுகள் தலையீடு செய்வதற்கு சீனா எதிர்ப்பு தெரிவிக்கின்றது.
எனினும் தேசிய சுதந்திரம், இறைமை, பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு சீனா பக்க பலமாக இருக்கும்.
அத்துடன் தமது சொந்த விவகாரங்களைக் கையாளும் அறிவும், ஆற்றலும் இலங்கை மக்களுக்கு உள்ளது என்று சீனா நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
















