
யாழ்.போதனா வைத்திய சாலையில் பாதுகாப்பு உத்தி யோகத்தராகக் கடமையாற்றும் கொழும்பைத் தலைமையகமாகக் கொண்ட நிறுவனத்தைச் சேர்ந்த மேலும் நான்குபேர் கஞ்சா புகைத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என்று வைத்தியசாலைத் தரப்புத் தெரிவித்தது.
கடந்த 23 ஆம் திகதி இரவு வைத்தியசாலையின் புதிய கட்டடத்தில் மொட்டை மாடியில் கஞ்சா போதைப் பொருள் புகைத்துக் கொண்டிருந்த வேளை வைத்தியசாலைப் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் மேற்பார்வையாளராக உள்ள திருகோணமலையைச் சேர்ந்தவரும் மற்றும் யாழ். நல்லூரைச் சேர்ந்த ஒருவர் என இரண்டு பேரை வைத்தியசாலைப் பொலிஸார் மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் இணைந்து கையும் மெய்யுமாகப் பிடித்தனர்
பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்திய குற்றத்துக்காக அவர்களிடம் விசாரணை முன்னெடுக்க முடியும் என்று யாழ்.பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் பெரேரா தெரிவித்திருக்கிறார்.
கஞ்சா போதைப் பொருளை விநியோகித்ததாகக் கூறப்படும் யாழ். நல்லூரைச் சேர்ந்த சந்தேக நபரை சில நாள்களுக்கு முன்னர் கைது செய்துள்ளதாகவும் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் கைதான ஊழியர் குறித்த, பாதுகாப்பு நிறுவனத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். நல்லூரைச் சேர்ந்தவரே கஞ்சா போதைப் பொருளை விநியோகித்தார். அவருக்கு வேறு நபர்களே கஞ்சா வழங்கியுள்ளனர் என்று தெரிவித்த பொலிஸார் அந்த விநியோகஸ்தர்கள் யார்? எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்? என்பது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.
அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கின்றனர். வைத்தியசாலையில் பல நாள்களாக இந்தச் சட்டவிரோத செயல் இடம்பெறுவதாக தெரியவந்த நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அதனுடன் தொடர்புடைய குற்றச்சாட்டிலேயே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைத்தியசாலை பாதுகாப்புப் பணியில் உள்ள மேலும் நான்குபேர் இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என்று வைத்தியசாலைத் தரப்புத் தெரிவித்தது.
















