நாங்களே புலியாகிவிடலாம் – பா.ஜ.க தலைவர் ஆதங்கம்

eelam-indiaஇலங்கை மீது போர் தொடுத்துத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டுமா என்று பா.ஜ.கவின் தமிழகத் தலைவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் வினவியுள்ளனர் என “த ஹிந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் ஈழத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயம் தமது தேர்தல் அறிக்கையில் உள்ளடக்கப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் மே மாதம் இடம் பெறவுள்ளது. இந்தத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.கவினரே ஆட்சியைக் கைப் பற்றுவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.

இவ்வாறானதொரு நிலையில், தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கும் நடவடிக்கைகளில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளது. இதற்காக ஒரு குழு செயற்பட்டு வருகின்றது. ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் இந்தியா திடமான நடவடிக்கை எடுக்கும் என்பதற்கான உத்தரவாதத்தையும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு பா.ஜ.கவின் தமிழகத் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சம்பந்தனுடன் ரகசிய சந்திப்பு

இது தொடர்பாக பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் இருவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனைச் சென்னையில் இரகசியமாகச் சந்தித்துப் பேசினர்.

இலங்கையில் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்? உங்களின் யோசனைகளையும் தேர்தல் அறிக்கையில் சேர்க்கத் தயாராக இருக்கிறோம் என்று அவர்கள் சம்பந்தனிடம் கூறியுள்ளனர்.

மத்தியில் அமைக்கப்படும் புதிய அரசு தூதரக ரீதியிலான நடவடிக்கைகளின் மூலம் ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியுமா அல்லது இந்திரா காந்தி எப்படி கிழக்குப் பாகிஸ்தான் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டாரோ அதைப்போன்று (பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்து) ஈழ விவகாரத்திலும் மத்திய அரசு தீர்வு காணவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா என பா.ஜ.கவின் தலைவர்கள் சம்பந்தனிடம் கேட்டுள்ளனர்.

நாங்களே புலியாகிவிடலாம்

இலங்கையில் நடந்த கொடுமைகளைப் பார்த்தபோது பேசாமல் விடுதலைப் புலி ஆகிவிடலாமா? என்று நான் கூடச் சில நேரங்களில் நினைத்தது உண்டு என்று பா.ஜ.க தலைவர் ஒருவர் இந்தச் சந்திப்பின்போது உணர்ச்சிவசப்பட்டு கூறியுள்ளார் என்றும் ஹிந்து வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அனைத்தையும் கேட்டுக்கொண்ட சம்பந்தன், ஈழத் தமிழர் பிரச்சினைக்கு இந்தியா எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து தனக்குள் இருந்த சில யோசனைகளை முன் வைத்தார் என்றும் ஹிந்து தெரிவித்துள்ளது.

முடிவாக, ஈழப்பிரச்சினையில் காங்கிரஸ் அரசு செய்யத் தவறியதை மோடி தலைமையில் அமையும் புதிய அரசு அரசியலுக்கு அப்பாற்பட்டு நிச்சயம் செய்யும் என்று பா.ஜ.க தலைவர்கள் சம்பந்தனிடம் உறுதி மொழியளித்துள்ளனர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply