அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேன – தியகல சந்தியில் நேற்று (12) மாலை 1 மணிநேரம் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
சிவனொளிபாதமலைக்கு செல்லும் நோட்டன்பிரிட்ஜ் பாதையில் ஒரு வாரகாலமாக வாகனம் செல்ல தடைசெய்து ஹட்டன் வழியாக வாகனங்களை அனுப்பியதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நோட்டன் பிரிட்ஜ், கினிகத்தேன, வட்டவளை ஆகிய நகரங்களின் வர்த்தகர்கள் கறுப்பு கொடியையும் பதாதைகளையும் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஹட்டன் வழியாக சிவனொளிபாதமலைக்கு பயணம் செய்யும்போது 16 கிலோ மீற்றர் தூரம் இருப்பதாகவும் இதனால் பெரும் சிரமம் ஏற்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
நோட்டன் பிரிட்ஜ் வீதியில் வாகனம் செல்லாத காரணத்தால் தமது வியாபாரங்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர்.
இந்த விடயத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுப்படுவதாக வியாபரிகளும், பொதுமக்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதைபற்றி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிடம் கருத்து கேட்டபோது, நோட்டன் பிரிட்ஜ் வீதி ஒரு சிறிய வீதியாகவும் சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்களை கொண்டு செல்லும் வாகன சாரதிகளுக்கு இந்ந பாதை பழக்கம் இல்லாத காரணத்தாலும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அதனாலேயே ஒரு வழி போக்குவரத்தை ஹட்டன் வழியாக நடைமுறைப்படுத்தும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டதாகவும் நோட்டன் பிரிட்ஜ் வீதியை பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கலந்துரையாடி வீதியை அகலமாக்கி காபட் போடுவதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
















