திருமலையிலும் மனிதப் புதைகுழி; விளையாட்டரங்குக்கு பின்புறமாகக் கண்டுபிடிப்பு

Mannar-deads2மன்னார் மனிதப்புதைகுழியைத் தோண்டும் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், திருகோணமலை மாவட்டத்திலும் மனிதப் புதைகுழி ஒன்று நேற்றுமுன் தினம் புதன்கிழமை இரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருகோணேச்சரம் கோயிலுக்கு செல்லும் பிரதான வீதியிலேயே குறித்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தப் பகுதி எதிர்வரும் திங்கட்கிழமை வரை பாதுகாப்பான பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை நகர சபைக்குப் பின்பாகவுள்ள மக்கெய்சர் விளையாட்டு மைதானக் காணியில் கிணறு வெட்டும்போதே மனித எலும்புக் கூடுகள் அங்கு தென்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டதுடன் பாதுகாப்பு தரப்பினர் தவிர்ந்த வேறெவரும் உட் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஊடகவியலாளர்களுக்கும் அனுமதிமறுக்கப்பட்டது.

மன்னார் புதைகுழி
தமிழர் தாயகப் பிரதேசமான வடக்கு மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் கடந்த டிசெம்பர் மாதம் 20 ஆம் திகதி மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.திருகேதீஸ்வரம் கோயிலுக்குச் செல்லும் பிரதான வீதியில் இந்த மனி தப் புதைகுழி கண்டுபிடிக்கப் பட்டிருந்தது.குறித்த மனிதப் புதை குழி இரண்டு மாதங்கள் கடந்தும் இன்னமும் தோண்டப்பட்டு வரும் நிலையில் 62 மனித மண்டை யோடுகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

மன்னார் புதைகுழியைத் தொடர்ந்து தற்போது, கிழக்கு மகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் மனிதப் புதை குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருகோணேஸ்வரர் கோயிலுக்கு செல்லும் பிரதான வீதியில், திருகோணமலை நகரசபையின் பின்பாகவுள்ள மைதானத்திலேயே இந்தப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மக்கெய்சர் விளையாட்டரங்கு புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது. இதற்கான கிணறைத் தோண்டும் முயற்சியில் நேற்று முன்தினம் புதன்கிழமை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது 2 அடி வரை தோண்டிய நிலையில் மனித எலும்புக் கூடுகள் அவதானிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அங்கு மூன்று எலும்புக் கூடுகள் வரையில் தென்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் அது தொடர்பில் உண்மையான எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை.

குவிந்தது இராணுவம்
எலும்புக் கூடுகள் தென்பட்ட தகவல்கள் பரவியதும், குறித்த பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.இராணுவத்தினரின் முற்றுகைக்குள் குறித்த பிரதேசம் கொண்டு வரப்பட்டிருந்தது.நேற்று மாலை நீதிபதி சம்பவ இடத்துக்கு வரும் வரை குறித்த பிரதேசம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்தது.
ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட எவரையும் அந்தப் பகுதிக்குச் செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை. திருகோணமலை புறநகர்ப் பொலிஸார் நேற்றுக் காலையிலிருந்து குறித்த பகுதியில் நின்றிருந்தனர்.

நீதிபதி வருகை
நேற்று மாலை 5.30 மணியளவில் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் டி.சரவணராஜா சம்பவ இடத்துக்கு வருகை தந்தார்.எலும்புக் கூடுகள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குறித்த பகுதியை அவர் பார்வையிட்டார். அவருடன் தொல் பொருள் திணைக்களத்தினர், வைத்திய அதிகாரிகள் ஆகி யோரும் சம்பவ இடத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.
குறித்த பிரதேசத்தை எதிர் வரும் திங்கட்கிழமை வரை பாதுகாப்புப் பிரதேசமாக நீதிபதி பிரகடனப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த திருகோணமலை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லால், அதுவரை குறித்த பகுதிக்குள் யாரும் நுழைவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் கூறினார்.

பற்றைக்காடு
குறித்த பிரதேசம் மிக நீண் டகாலமாகப் பற்றைக்காடாக இருந்தது.கடந்த சில வருடங் களுக்கு முன்னரே மைதானத் துக்காகக் குறித்த பகுதி துப்புரவு செய்யப்பட்டுள்ளது. திருக்கோணேஸ்வரர் கோயிலின் பிரதான வாயிலினுள் அமைந் துள்ள இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே குறித்த பகுதி இருந்து வந்துள்ளது.

மன்னார் புதைகுழி தோண்டத் தோண்ட எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுப் பெரும் புதை குழியாக உருவெடுத்துள்ள நிலை யில் தமிழர் தாயகப் பிரதேசத் தில் மற்றுமொரு மனிதப் புதை குழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது. இரண்டு மனிதப்புதைகுழிகளும் பாடல் பெற்ற திருத்தலங்களுக்கு அண்மையிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளளமை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: , ,

Leave a Reply