தற்காலிக நிறுத்தம்; 17இல் புதைகுழி மீண்டும் தோண்டப்படும்

manar 4மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தோண்டும் பணிகள் நேற்றுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு தொடர்ந்தும் எதிர்வரும் 17ஆம் திகதி பணிகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று 23ஆவது தடவையாக தோண்டப்பட்டபோது, ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் அநுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ன தலைமையிலான குழுவினரினால் மேற்படி மனித புதைகுழி தோண்டும் பணி நடைபெறுகின்றது.

இந்த நிலையில், நேற்றுடன் தோண்டும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதன்படி நேற்று வரை எச்சங்கள் உட்பட 62 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட 04 மனித எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்கள் நேற்று பொதி செய்யப்பட்டு மன்னார் நீதவானின் உத்தரவுக்கு அமைய மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மன்னார் வைத்தியசாலையில் 39 மனித எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீண்டும் எதிர்வரும் 17ஆம் திகதி 24ஆவது தடவையாக மனித புதைகுழி மன்னார் நீதவான் முன்னிலையில் தோண்டப்படவுள்ளது.

மன்னார், திருக்கேதீஸ்வரம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மாந்தைச் சந்தியிலிருந்து திருக்கேதீஸ்வரத்திற்குச் செல்லும் பாதையிலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவிலேயே இந்த மனித எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

கடந்த டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி குறித்த பகுதியில் குடிநீர் இணைப்பை வழங்குவதற்காக வீதிக்கு அருகில் தோண்டும் போதே மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதேவேளை மன்னாரில் மனிதப்புதைகுழி அகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திருகோணமலையிலும் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply