அரசாங்கம் யதார்த்தமான முனைப்புக்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது என வட மாகாணசபையின் முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கின் அடிப்படைச் சுதந்திரம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியன தொடர்பில் யதார்த்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கை ரீதியான குறைபாடுகளே இன்று பிரச்சினைகளாக விஸ்வரூபம் எடுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். தமக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். வடக்கு இராணுவ பிரசன்னம் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் காரணமாக இவ்வாறு விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெல்லிப்பளை பிரதேசத்தில் வைத்து 12000 துருப்பினரே வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்ததாகவும், அதன் பின்னர் ஜனாதிபதியின் செயலாளர் கருத்து வெளியிட்ட போது வடக்கில் 70000 துருப்பினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார் என விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கில் 12000 துருப்பினர் நிலைநிறுத்தப்படுவது பொதுமானது என்றே நாட்டின் படைச் சேனாதிபதி கருதுகின்றார் என அவர் தெரிவித்துள்ளார். எனினும், வடக்கில் அதனை விடவும் அதிகளவான துருப்பினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கின் துருப்பினர் எண்ணிக்கை தொடர்பில் பலர் கருத்து வெளியிட்டு வருகின்ற போதிலும், கிட்டத்தட்ட 150000 படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர் என்பதே தமத நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய பாதுகாப்பு மற்றும் அடிப்படைச் சுதந்திரம் ஆகிய தொடர்பில் யதார்த்தமான கொள்கைகள் அமுல்படுத்தப்பட்டால் முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்பு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கு நிலைமை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பெரும் எண்ணிக்கையிலான இடம்பெயர் மக்கள் வடக்கில் இன்னமும் மீள்குடியேற்றப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பெரும் எண்ணிக்கையிலானவர்களின் நிலைமை பற்றிய தகவல்களும் உரிய முறையில் வெளியிடப்படவில்லை என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
















