டிடிவி தினகரன் மன்னிப்பு கேட்க வேண்டும்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ஜெயலலிதா பற்றி விமர்சனம் செய்தது தொடர்பாக டிடிவி தினகரன் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.

அரசியல் பண்பாடு இல்லாமல் அமைச்சர்களை பட்டப்பெயர் சூட்டி இழிவாக, மலிவாக பேசி வந்த தினகரன் தான் ஏதோ மன்னர் பரம்பரையில் இருந்து வந்தது போல நினைத்துக் கொண்டு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரை தொடங்கி அம்மாவால் அரசியலில் வளர்த்து எடுக்கப்பட்டவர்களை தரம் தாழ்ந்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

தனி நபர் தாக்குதல், மிரட்டல் போன்றவற்றையே பொழுதெல்லாம் கடைப்பிடிக்கும் தினகரன் இவற்றை எல்லாம் அவர் சென்று வந்த சென்னை மத்திய சிறை, கடலூர் சிறை, திகார் சிறை போன்ற இடங்களில் கற்றுக்கொண்ட பண்பாக இருக்கலாம்.

ஆனால் புரட்சித் தலைவரையும், புரட்சித் தலைவியையும் பின்பற்றி நடக்கக்கூடிய நாங்கள் அத்தகைய இழிவான அரசியலை என்றைக்கும் மேற்கொண்டது இல்லை.

இந்நிலையில் பசும்பொன் தேவர் திருமகனாரின் குருபூஜைக்கு சென்று வந்த தினகரன் அந்த புண்ணிய திருத்தலத்தில் கேவலமான அரசியல் யுக்தியை கையில் எடுத்து அங்கு வைக்கப்பட்ட பேனர்களை அடித்து நொறுக்கி கிழிக்க வைத்து அதனை ரசித்தார் என்றால் தினகரனின் வக்கிர புத்திக்கு இதுவே சான்று ஆகும்.

மக்கள் முகம் சுளிக்கும் அந்தகாரியத்தை செய்து விட்டு அதனை பொதுமக்களின் மீதுபழி போட்டது தினகரனின் கிரிமினல் தனத்திற்கு சாட்சியாகும். இப்படி அரசியலில் அடிப்படை நாகரித்தையே சிதைக்கிற வேலையில் ஈடுபட்டு வருபவர் அவ்வப்போது அவர் அம்மாவின் மீதுகொண்டு இருக்கும் காழ்ப்புணர்ச்சியையும் வெளிகாட்டி வருகிறார்.

தினகரன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும் போது அம்மாவின் புனித பெயரால் வரும் நமது அம்மா நாளேட்டை நமது பாட்டி, நமது கொள்ளு பாட்டி என்று எல்லாம் அடை மொழி போட்டு அவர் அம்மாவின் மீது இருக்கும் எரிச்சலை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அது மட்டுமல்லாது அம்மாவை அவமரியாதை செய்துள்ளார். அவர் பயன்படுத்திய சொற்களுக்குகாக டி.டி.வி.தினகரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!