தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி கின்னஸ் சாதனையாக செய்யவிருக்கும் இரத்ததான முகாமில் கலந்து கொள்ள அரசு போக்குவரத்து ஊழியர்களை கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
எதிர்வரும் 24ம் திகதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள். இதையொட்டி இரத்த தானத்தில் கின்னஸ் சாதனை செய்ய தமிழக அரசு போக்குவரத்து துறை முடிவெடுத்துள்ளன.
இதற்கான ஏற்பாடுகள் 10 நகரங்களில் செய்யப்பட்டுள்ளன. இதன்படி இன்று மதுரை மற்றும் வேலூர் உள்ளிட்ட இடங்களில் இரத்த தான முகாம் நடைபெற்றது. ஆனால் போக்குவரத்து கழகத்தில் உள்ள அனைத்து ஊழியர்களையும் இரத்ததான முகாமில் கட்டாயம் கலந்து கொள்ள வைக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறதாம்.
மேலும் அப்படி கலந்து கொள்கிறவர்களுக்குத்தான் விடுமுறையுடன் சம்பளம் தருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல் இரத்த தான முகாமில் கலந்து கொண்டால் சலுகைகளும் தரப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் (ஆர்.டி.ஓ), டிரைவிங் லைசன்ஸ் எடுக்க வருகிறவர்களிடம் இரத்ததானம் கொடுக்க சம்மதித்தால்தான் லைசென்ஸ் தரப்படும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறதாம்.
தனியார் பேருந்துகள், பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகளில் பேருந்துகள் வைத்திருப்பவர்களும் இரத்ததானத்திற்கு ஆட்கள் அனுப்ப கட்டாயப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
பல கல்லூரிகளுக்கும் கூட விடுப்பு கொடுக்கப்பட்டு, மாணவர்களுக்கு செலவுக்கு பணமும் கொடுத்து முகாமுக்கு அழைக்கப்பட்டிருக்கின்றனராம். இதனால் இன்று பல ஊர்களுக்கு அரசுப் பேருந்துகள் சரியாக இயக்கப்படவில்லை என்ற புகார்களும் எழுந்துள்ளன.
















