வசந்த கால இன்பத்தில் அதிகமான மக்கள் மூழ்கையில், துன்பத்தில் மூழ்கும் மக்கள் தொகையும் அதிகரிக்கிறது

Summerவசந்த கால அழகில் வசப்பட்டு இன்பத்தில் அதிகமான மக்கள் மூழ்கையில், அதன் வருகை கண்டு அஞ்சும் மக்களும் இப்பூமியில் அதிகரித்து வருவதாக ஒரு அதிர்ச்சியான தகவலை ஆய்வுலகம் முன் வைத்துள்ளது.

சூரியப் பிரகாசம் நிறைந்த நாட்களின் எதிர்பார்ப்பால் விளையும் மனோரம்மியத்தை, இயற்கையில் தூவப்படவிருக்கும் மகரந்தத்தூள் கொள்ளையடித்துப் போகும் நிலை மக்களின் அச்சத்திற்கு காரணமாகிறது.

மகரந்தத்தூள் (Pollen) ஒவ்வாமையின் தாய்வீடாக அமைந்து, தும்மல் கண்களாலும் மூக்கினாலும் நீர்வடிதல், கண்ணெரிவு, சில சமயங்களில் இருமலெனப் பல உபாதைகளைத் தந்துவிடுகிறது. வெளியிலிருந்து நம் உடலிற்குள் புக முனையும் சகலவற்றையும், தோலும் சளிபோன்ற தோற்பகுதியும் (Mucuos) தடுக்க முயன்று உடலைப்பாதுகாக்கும். அடுத்தபடியாக, சுவாசக்காற்று மூலமும் உணவு வகைகளாலும் உடலினுள் புகுந்து தீங்கு செய்ய முனைபவற்றை உடலின் பாதுகாப்புக்கான கட்டுமான அமைப்பு (Immune System) சீர் செய்யும்.

மூக்கினதும் வாயினதும் உட்பகுதி, மர்ம உறுப்புக்களின் பகுதிகள் என்பன சளிபோன்றமைந்த தோலைக் கொண்டுள்ளன. உடலின் எதிர்ப்பு சக்தியானது சுவாசக் காற்றிலுள்ள மகரந்தத்தூளை உடலிற்கு தீங்கேற்படுத்தக் கூடிய கிருமிகளை எதிர்ப்பது போல் எதிர்க்க ஆரம்பிக்கிறது.

இச்சமயம் உடலிற்குத் தீங்கு விளைவிக்குமென உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியால் நம்பப்படும் மகரந்தத்தூளை உடலிலிருந்து வெளியேற்ற, கண் மூக்கு இவற்றில் நீரை வடியச் செய்தும், தும்மல் இருமல் போன்றவற்றை ஏற்படுத்தியும் உடலின் எதிர்ப்பு சக்தி தவறாகத்தொழில் படும் போது அது ஒவ்வாமை எனப்படுகிறது.

ஒவ்வாமையைக் கட்டுப்படுத்த அல்லது குணப்படுத்த பல வழிகள் மருத்துவ உலகில் கையாளப்படுகின்றன. அவற்றில் ஆடா தோடா இலையின் சாறு கொண்டு ஒவ்வாமையைக் குணப்படுத்தும் இயற்கை முறைகளும், ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருளை (Allegen) அதிகளவில் ஊசி மூலம் உடலில் செலுத்தி, சாதாரண அளவில் ஒவ்வாமையை உண்டாக்கும் பதார்த்தம் உடலினுள் நுழையும் போது, உடல் அதனை அலட்சியம் செய்யும் வண்ணம் உடலைப் பழக்கிடும் முறையும் முக்கியமானவையாக மருத்துவ உலகில் காணப்படுகிறது,

மூக்கினை அடிக்கடி கழுவி அதனை ஈரமாக வைத்திருக்க வல்ல கிறீம் வகையைப் பூசிக் கொள்வதாலும், கண்களுக்கும் அதற்கென அமைந்த Drops எனப்படும் துளியிடுவதனாலும், நோயின் உபாதையிலிருந்து விடுபடலாம். அத்தோடு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை ஒழுங்குபடுத்த வல்ல (Linoleic Acid) லினோலிக் அமிலம் அதிகம் காணப்படும் கறுப்பு ஜீரகத்தை உணவில் சேர்த்துக் கொள்வதாலும், அதிலிருந்து பெறப்பட்ட எண்ணையைத் தினமும் உபயொகித்து வருவதாலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை ஒழுங்குபடுத்தி ஒவ்வாமையைத் தடுக்கலாம்.

இந்த லினோலிக் அமிலம் முறையாக உடலில் தொழிற்பட உதவும் Zink ஊட்டச்சத்து அதிகமாகக் காணப்படும் பருப்பு வகை, சோழன், அவரை வகைகளை உணவிற் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது வைத்திய ஆலோசனையின் பேரில் Zink மாத்திரைகளை உட்கொள்ளலாம். அத்டோடு வைட்டமின் டீ உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை சூழலிற்கு ஏற்ப மாற்றி அமைக்கும் சக்தி வாய்ந்ததால், வைட்டமின் டீ யை உடல் தயாரிப்பதற்கு உதவும் சூரிய ஒளி உடலில் படும்படி உலவி வருதலும், வைட்டமின் டீ அதிகமுள்ள முட்டை, மீன், பால், பாலுணவு போன்றவற்றை உணவுப் பட்டியலில் சேர்ப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். தேங்காய் எண்ணை வயிற்றிலும் குடற் பகுதியிலும் நோய் எதிர்ப்பு சக்தியை சீர்செய்ய வல்ல பக்ரீரியாக்களை உருவாக்கி பாதுகாக்கிறது. Alcohol ஒவ்வாமையை தரும் Histamin கோமோனின் தாக்கத்தை அதிகரிக்கச் செய்யும்.பழங்கள், மரக்கறி வகைகளை ஒவ்வாமை வகைக்கேற்பத் தேர்ந்தெடுத்து அருந்தும் பழக்கத்தை வழக்கப் படுத்திக் கொள்ளல் வேண்டும்.

ஒவ்வாமை அகலத் தரமான வழிகளை நாம் பின்பற்ற வேண்டுமேயன்றி இலவச வரமால் அது விலகுமென நம்பின், பலமான அதன் தாக்கமே நம்மிடையே வலம் வந்து நம் நலம் போக்கு மென்பதே யதார்த்தமாகும்.

-மகேந்தி, GTN

Tags: , ,

Leave a Reply