இலங்கை போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் – நவிபிள்ளை

navanethem-pillay2இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின்போது நடந்ததாக குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடக்கவுள்ள மனித உரிமை மன்றக் கூட்டத்தில் ஐநா மனித உரிமைகள் மன்றத்தின் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் பரிந்துரைக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை அரசாங்கம் பதில்களை தயாரிக்க வேண்டும் என்பதற்காக நவநீதம் பிள்ளை ஜெனீவாவில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையின் நகல் ஒன்று அரசாங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளது என்றும், அப்படி வழங்கப்பட்ட அறிக்கையை தாங்கள் காண நேர்ந்ததாகவும் சண்டே டைம்ஸ் கூறுகிறது.

குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஒழுங்கான விசாரணை வேண்டும் என்று சர்வதேச சமூகம் திரும்பத் திரும்ப வலியுறுத்தியும் இலங்கை அரசாங்கம் முறையான விசாரணைகளை இத்தனைக் காலமும் நடத்தாமல் இருந்துவருவதால், சுயாதீன விசாரணை ஒன்றை ஐநா மனித உரிமைகள் கவுன்சில் நடத்த வேண்டும் என்று நவநீதம் பிள்ளை பரிந்துரைப்பதாக அவரது அறிக்கை கூறுகிறது என உள்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமைச் சட்டங்களும் மனிதாபிமானச் சட்டங்களும் மீறப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சம்பவங்களை கூடுதலாக விசாரிப்பதென்பதும், பொறுப்புகூறல் சம்பந்தமாக உள்நாட்டளவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை கண்காணிப்பதென்பதும் அமைக்கப்படுகின்ற சர்வதேச விசாரணையின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று நவநீதம் பிள்ளை கேட்டுக்கொண்டுள்ளார்.

“இலங்கையில் புதிதாக சாட்சிகள் பாதுகாப்பு சட்டமும் வழிமுறையும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நவநீதம் பிள்ளை கேட்டுக்கொண்டுள்ளார். இப்படி ஒரு சட்டத்தை அரசாங்கம் உருவாக்கிக்கொண்டுள்ளது என்று நான் நம்புகிறேன். தகவல் சுதந்திர சட்டம் பற்றியும் அவர் குறிப்பிடுகிறார். இப்படியான சட்டம் வேண்டும் என்று எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புகள், ஊடகங்கள் என பல தரப்பிலிருந்தும் குரல்கள் எழுந்திருந்தாலும், அவ்விவகாரத்தில் இதுவரை எந்த முன்னேற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை.” என்று அவர் குறிப்பிட்டார்.

பொறுப்புகூறல் சம்பந்தமான உள்நாட்டளவிலான வழிமுறைகள் இதுவரை காலமும் பலன் அளிக்காதது உண்மையையும், நீதியையும் நிலைநாட்டுவதில் இலங்கையிடம் அரசியல் உறுதிப்பாடு இல்லை என்பதையே காட்டுவதாக நவநீதம் பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply