உலகளவில் அருகிவரும் யானை, காண்டாமிருகம் போன்ற வனவிலங்குகளின் பாதுகாப்பிற்காக பல நாடுகள் தற்போது வலிமையான சட்டங்களையும், அவற்றை வேட்டையாடுவோர் மீது கடுமையான தண்டனைகளையும் விதித்து வருகின்றன.
இங்கிலாந்தின் இளவரசர் வில்லியம்ஸ் கடந்த வாரம் வனவிலங்குகளின் பாதுகாப்பிற்காக ஐக்கியக் கூட்டணி ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
இங்கிலாந்தின் வெளியுறவுச் செயலாரான வில்லியம் ஹேக் தலைமை தாங்கிய இந்தக் கூட்டணியின் கருத்தரங்கு மாநாட்டில் 40க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
உலகில் அருகிவரும் உயிரினங்களை வேட்டையாடும் கும்பல் சக்திவாய்ந்ததாகவும், நவீனமாகவும் இருக்கின்றது. ஆனால் அவற்றுக்கு சமமான ஒரு சக்தி வாய்ந்த கூட்டணியை அமைத்து நாம் போராட இருக்கின்றோம் என்று இளவரசர் வில்லியம்ஸ் அந்தக் கருத்தரங்கில் பேசினார்.
இதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் 1.9 பில்லியன் டாலர் அளவிற்கு யானைத் தந்தங்கள்,காண்டாமிருகக் கொம்புகள் மற்றும் புலிகளின் பகுதிகள் போன்றவை சட்டவிரோதமாக வியாபாரம் செய்யப்படுவதை தடுக்க இந்த லண்டன் பிரகடனம் உறுதி பூண்டுள்ளது.
இதன் முதல்கட்ட நடவடிக்கையாக தங்களது பக்கிங்ஹாம் அரண்மனையில் உள்ள தந்த கலைப்பொருட்கள் அனைத்தையும் அழித்துவிடும் விருப்பத்தை நேற்று அவர் வெளியிட்டதாக முதல்நிலை விலங்குகள் குறித்த ஆய்வை நடத்திவரும் ஜேன் குடால் தெரிவித்துள்ளார்.
அந்த அரண்மனையில் இந்தியாவிலிருந்து பெறப்பட்ட யானைத் தந்தத்தின் தொகுப்புகள் அடங்கிய சிம்மாசனம் உட்பட மொத்தம் 1,200 பொருட்கள் இருப்பதாக அறியப்படுகின்றது. இவற்றில் மின்விசிறிகள், நுண்ணிய கலைப்பொருட்கள், சாமான்கள் போன்றவையும் அடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2013 ஆம் ஆண்டில் மீட்கப்பட்ட 45 டன் எடை கொண்ட யானைத் தந்தங்களே இந்தக் கால் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய மீட்பு நடவடிக்கையாகும். கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சீனா 7 டன் எடை கொண்ட தந்தங்களை அழித்துள்ளது.
















