மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்க வேண்டுமென போக்கோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பு ஆயுதமேந்திய போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.
நைஜீரியாவில் உள்ள கிருஸ்துவ தேவாலயங்களை தாக்கி அழிக்கும் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் அப்பாவி பொதுமக்களையும் ஈவிரக்கமின்றி கொன்று குவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் கிருஸ்துவர்கள் அதிகம் வாழும் இஸ்கா என்ற கிராமத்தை லாரிகள் மற்றும் மோட்டர் சைக்கிள்களில் வந்த போக்கோ ஹரம் தீவிரவாதிகள் நேற்று காலை சுற்றி வளைத்தனர்.
இராணுவ சீருடை அணிந்திருந்த அவர்கள் வீதிகளில் நின்றிருந்த மக்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிகளால் சுட்டனர். குண்டு பாய்ந்த மக்கள் சுருண்டு விழுந்து துடிதுடிப்பதை கண்டு ஆனந்த கூச்சலிட்டபடி ஓடிய தீவிரவாதிகள், வீடுகளுக்குள் மறைந்திருந்த ஆண், பெண்களையும் வீதிக்கு அழைத்து வந்து சுட்டுத் தள்ளினர்.
வீச்சரிவாள் மற்றும் வெட்டுக்கத்திகளால் பிணங்களை வெட்டி சிதைத்த அவர்கள் பாதுகாப்பு படையினர் வருவதற்குள் அந்த இடத்தில் இருந்து தப்பியோடி தலைமறைவாகினர்.
இந்த கொடூர தாக்குதலில் 106 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 60 பேரின் உடல்கள் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டன. தூரமான இடங்களில் வாழும் நெருங்கிய உறவினர்களின் இறுதி அஞ்சலிக்காக எஞ்சியுள்ள உடல்கள் வைகப்பட்டுள்ளதாக இஸ்கா கிராமத்தை சேர்ந்த ஒரு முதியவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
















