ஐ.நா மனித உரிமைப் பேரவை தீர்மானம் தமிழ் மக்களுக்கு நன்மையளிக்க கூடியதாக இருக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பொதுச்சபை வலியுறுத்தல்

kajenthirakumarஇலங்கையின் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் மட்டுமல்லாமல், ஆங்கிலேயர் இந்த நாட்டைவிட்டுச் சென்ற நாள் முதல் இன்று வரையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்றிருக்கின்ற விடயங்களை விசாரிப்பதாக சர்வதேச விசாரணை அமைய வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வருடாந்த பொதுச்சபை கோரியிருக்கின்றது.

அந்த முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அவர்களின் தலைமையில் வவுனியா நகரசபை மண்டபத்தில் இந்தக் கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது.

ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தில் தமிழ் மக்களுக்கு நன்மை அளிக்கத்தக்க வகையில் என்னென்ன விடயங்கள் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பது உட்பட பல முக்கிய தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

இலங்கையில் நடைபெற்றதும், நடைபெற்றுக் கொண்டிருப்பதும், இன அழிப்பு என்பது தெளிவாக ஜெனிவா தீர்மானத்தில் கூறப்பட்டிருக்க வேண்டும் என்றும் இந்த இன அழிப்பை உள்ளடக்கியதாக பக்கசார்பற்ற சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் கூறினார்.

வெறுமனே போர் நடைபெற்ற கடைசி மூன்று வருடங்களில் நடைபெற்றவைகளை மட்டும் விசாரணை செய்வதாக அல்லாமல், ஆங்கிலேயர் இந்த நாட்டில் இருந்து வெளியேறிச் சென்றது முதல் இன்று வரையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சம்பவங்கள் தொடர்பில் இந்த விசாரணை நடத்தப்பட வேண்டும்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றத்தக்க வகையில் ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கான சர்வதேச பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும் என்பது உட்பட மொத்தம் நான்கு தீர்மானங்கள் இந்த பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் கூறினார்.

இந்த விடயங்கள் குறித்து கடந்த மாதம் ஜெனிவாவில் பலதரப்பட்ட நாடுகளின் இராஜதந்திரிகள் பிரதிநிதிகளுடன் பேசியிருப்பதாகவும், அமெரிக்க ஆதரவு சக்திகளுடன் மட்டுமல்லாமல், அமெரிக்க பிரேணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற ஆபிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து வெறுமனே பிரேரணையை எதிர்க்காமல், பாதிக்கப்பட்ட மக்கள் நன்மையடையத்தக்க வகையில் அந்தப் பிரரேரணைக்கு வலுவூட்ட வேண்டும் என்று கோரியிருப்பதாகவும் கஜேந்திரகுமார் குறிப்பிட்டார்.

Tags: , , ,

Leave a Reply