பெங்களூர் ஜே.சி.ரோடு எல்.ஐ.சி. வளாகத்தில் அமைந்துள்ள ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க சென்ற வங்கி பெண் அதிகாரி ஜோதி மர்ம நபரால் கொடூரமாக தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையன் இன்னும் பொலிஸாரின் பிடியில் சிக்கவில்லை.
இந்த நிலையில், ஏ.டி.எம். காவலாளியை கொடூரமாக தாக்கி பணம் கொள்ளையடிக்க முயன்ற மற்றொரு சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூர் பீனியா அருகே திகளரபாளையாவில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு தும்கூரை சேர்ந்த பசவராஜ் என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
அதிகாலையில் 2.30 மணியளவில் முகமூடி அணிந்த 2 பேர் ஏ.டி.எம் மையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்த அவர்கள், அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவை உடைத்தனர். கேமிராவுடன் பொருத்தப்பட்டு இருந்த மின்சார வயரையும் வெட்டி எடுத்தனர். காவலாளி பசவராஜ் கண்ணில் மிளகாய் பொடி தூவினர், கண் எரிச்சல் தாங்கததால் அவர் துடிதுடித்தார்.
பின்னர் அந்த மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் பசவராஜை சரமாரியாக தாக்கினார்கள். இதில், அவரது தலை, கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
காவலாளியை கொடூரமாக தாக்கி பணம் கொள்ளையடிக்க முயற்சி
அதன்பிறகு, ஏ.டி.எம். எந்திரத்தை இரும்பு கம்பியால் உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தார்கள். இதற்கிடையில்,சுய நினைவு திரும்பிய காவலாளி பசவராஜ் திருடன் திருடன் என்று கூச்சலிட்டார்.
அவருடைய அலறல் சத்தத்தை கேட்டு பக்கத்து கட்டிடத்தில் காவலாளியாக பணியாற்றும் பிரகாஷ் என்பவர் ஓடிவந்தார். உடனே மர்ம நபர்கள், கொள்ளை முயற்சியை கைவிட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிவிட்டனர். உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த பசவராஜ் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார்.
அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பசவராஜின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
பொலிஸாரின் விசாரணையில் ஏ.டி.எம். மையத்தில் பணம் ஏதும் கொள்ளை போகவில்லை என்பது தெரியவந்தது.
அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் கொள்ளையர்கள் வருவது, காவலாளியை தாக்குவது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளன. ஆனால் கொள்ளையர்கள் முகமூடி அணிந்திருந்ததால், அவர்களது முகம் சரியாக தெரியவில்லை. இருப்பினும் கேமிராவில் பதிவான காட்சிகள் மூலம் கொள்ளையர்களை அடையாளம் காண பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
















