
ஆணைக்குழுவின் மொழி பெயர்ப்பு நடவடிக்கைகள் மிக மோசமாக இருக்கின்றது. அத்துடன் ஆணைக்குழுவின் விசாரணைக்கு அழைக்கப்படுவர்களுக்கு உரிய காலத்தில் கடிதங்கள் கிடைப்பதில்லை என்று அமர்வுகளின் அவதானிப்பாளர்களாகச் செயற்பட்டு வரும் மன்னார் பிரஜைகள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இடம் பெற்ற காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக் குழுவின் அமர்வுகளின் அவதானிப்பாளர்களாக இருந்த மன்னார் பிரஜைகள் குழுவினர் நேற்றைய அமர்வுகளின் முடிவில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.
அங்கு அவர்கள் தெரிவித்தவை வருமாறு:
காணாமற்போனோர் தொடர்பில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று வருகின்றன.ஆனாலும் அவர்கள் எப்போது விசாரிக்கப்படுவார்கள் என்பது தொடர்பில் ஆணைக்குழுவினர் எதையும் வெளிப்படுத்தவில்லை.
எமது அமைப்பினூடாகப் பதிவு செய்தவர்கள், ஆணைக் குழுவுக்கு நேரடியாக முறைப்பாடுகள் அனுப்பியவர்கள்,இப் போது பதிவு செய்தவர்கள் எல்லோருக்கும் கடிதம் கொடுக்கின்றனர்.
ஒரு முறைப்பாட்டுக்கே மூன்று கடிதங்கள் வழங்கப்படுகின்றன.இவ்வாறு ஒரு முறைப் பாட்டுக்குப் பல கடிதங்கள் வழங்கும் இவர்கள் எவ்வாறு சரியானதொரு அறிக்கையைச் சமர்பிப்பார்கள்?
ஆணைக்குழுவுக்குப் பலர் சமுகமளிக்காமல் விடுகின்றனர். ஒழுங்கான முறையில் அவர்களுக்குக் கடிதங்கள் அனுப்பப்படவில்லை.
இன்றைய அமர்வுக்கு வருமாறு இன்றும் (நேற்று) சிலருக்குக் கடிதம் சென்றடைந்துள்ளது. ஆணைக்குழுவினர் தாங்கள் விசாரணைக்கு அழைக்கப்போவர்களைப் பகிரங்கப்படுத்தினால் இவ்வாறான பிரச்சினை எழாது.அத்துடன் கடிதம் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்னரே கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
அத்துடன் ஆணைக்குழுவில் சாட்சியமளிப்பதை மொழிபெயர்ப்பது முக்கியமானது. ஆனால் மொழி பெயர்ப்பு ஒழுங்காக இல்லை. அத்துடன் சாட்சிகள் தங்களது கருத்தைச் சொல்லவிடாமல் குழப்பமாகக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். சாட்சிகள் பூரணமாகத் தங்கள் சாட்சியத்தைச் சொல்ல ஆணைக்குழு அனுமதிக்க வேண்டும்-என்று தெரிவித்தனர்.
















