டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதல்-அமைச்சராக பதவி வகித்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால், வலிமையான ஜனலோக்பால் மசோதாவை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொண்டார்.
அதன்படி இந்த மசோதாவை கடந்த 14-ந் திகதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய முயன்றார்.
ஆனால் இதற்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் மசோதா தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது மந்திரிகளுடன் ராஜினாமா செய்தார்.
மேலும் சட்ட மன்றத்தை கலைத்து விட்டு,புதிதாக தேர்தல் நடத்துமாறு துணைநிலை ஆளுநரை அவர் கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து டெல்லி அரசியல் நிலவரம் குறித்து துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், ஜனாதிபதிக்கு அறிக்கை அனுப்பினார்.
மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மந்திரிகளின் ராஜினாமா கடிதங்களையும் அத்துடன் அவர் அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில், துணைநிலை ஆளுநர் அளித்த அறிக்கையின்படி டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த மத்திய மந்திரிசபை பரிந்துரைத்துள்ளதாகவும்,அதன்படி அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ளதாவும் உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பாக பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து பேசிய அவர், ‘அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மாநில மந்திரிகளின் ராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஏற்றுக்கொண்டதுடன், டெல்லியில் ஜனாதிபதி ஆட்சிக்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன் மூலம் டெல்லி சட்டமன்றம் முடக்கப்பட்டுள்ளது’ என்றார். மேலும், ‘இந்திய அரசியல் சட்டப்பிரிவு 239 மற்றும் 239 ஏஏ-ன் படி ஜனாதிபதியின் பிரதிநிதியாக டெல்லியில் துணைநிலை ஆளுநர் ஆட்சியை கவனிப்பார்’ என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
















