வெளிமாவட்டங்களில் காணாமற்போனோரின் உறவுகள் சாட்சியமளிக்க அனுமதி வேண்டும்; சம்பந்தன்

sambanthan2
காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி யால் நியமிக்கப்பட்ட ஆணைக் குழுவின் அமர்வுகள் வடக்கில் நடைபெறுவதை வர வேற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இந்த ஆணைக் குழுவில் குறைபாடு உள்ளது என்றும் விசனம் தெரிவித்தார்.
“”வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழர்கள் பலர் இம்மாகாணங்களுக்கு வெளியிலும் கைதுசெய்யப்பட்டு – கடத்தப்பட்டு காணாமற்போயுள்ளார்கள். குறிப்பாக கொழும்பில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த அதிகமான தமிழ் இளைஞர்கள் காணா மல்போயுள்ளனர்.

எனினும், யாழ்ப்பாணத்தில் கடந்த நான்கு நாள்களாக இடம் பெற்ற ஆணைக்குழுவின் விசாரணை அமர்வுகளில் வடக்கு, கிழக்குக்கு வெளியே காணாமற்போனோர் தொடர்பில் அவர்களின் உறவுகள் சாட்சியமளிக்க அனுமதிக்கப்பட வில்லை.

இது காணாமற் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் குறை பாடாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்குக்கு வெளியில் காணாமற்போனோரின் உறவுகளை சாட்சியமளிக்க சந்தர்ப்பம் அளித்தால் மேலும் பல உண்மைகளை அவர்கள் வெளியிடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

காணாமற்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக் குழுவின் முதலாவது பகிரங்க அமர்வுகள் கடந்த மாதம் 18,19,20,21 ஆம் திகதிகளில் கிளிநொச்சியில் நடைபெற்றன. இதனையடுத்து இரண்டாவது பகிரங்க அமர்வுகள் கடந்த 14,15,16,17 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளன. இந்த அமர்வுகளில் சாட்சியமளித்த பெரும் பாலானோர், இராணுவத்தினர், புலனாய்வுப் பிரிவினர், ஈ.பி.டி.பியினர், கருணாகுழு வினர் ஆகியோரே தங்கள் கண்முன்னால் தமது உறவுகளைப் பிடித்துச் சென்றுள்ளனர் என்றும், இதன் பின்னரே தமது உறவுகள் காணாமற் போயுள்ளார்கள் என்றும் கூறியுள்ளனர்.

இந்நிலையில், காணாமற் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர் வுகள் தொடர்பிலும், இந்த அமர்வுகளில் சாட்சியமளித்து வரும் மக்களின் கருத்துகள் தொடர்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் “உதயன்’ நேற்று வினவியது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரிலும் அதற்கு முன்னரும் காணாமற்போனோரின் உறவுகள் எதற்கும் அஞ்சாது சாட்சியமளித்து வருகின்றார்கள். இந்த அமர்வுகளின் ஊடாக தமது உறவுகள் எவ்வாறு காணாமற்போனார்கள் என்பதை அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெட்டத் தெளிவாகக் கூறி வருகின்றார்கள்.

அரச படைகளினால்தான் பெரும்பாலானோர் பிடிக்கப்பட்டு காணாமல்போயுள்ளனர் என்ற உண்மையை அவர்களின் உறவுகள் சாட்சியமளிக்கும் போது தெரிவித்து வருகின்றனர். எனவே, வடக்கு, கிழக்குக்கு வெளியிலும் காணாமற்போன தமிழர்கள் தொடர்பில் அவர்களின் உறவுகள் சாட்சியமளிக்க சந்தர்ப்பம் கொடுத்தால் மேலும் பல உண்மைகள் வெளிவரும்.

நடந்த உண்மைகளை சாட்சியமளிக்கும்போது மக்கள் கூறினாலும், காணாமற்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக் குழுவின் விசாரணை அறிக்கை எவ்வாறு அமையப்போகின்றது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் – என்றார்.

Tags: , ,

Leave a Reply