கோத்தாவின் பரப்புரை சட்டவிரோதம்; சுதந்திரமான தேர்தல் சந்தேகம் தேர்தல் ஆணையரிடம் ஐ.தே.க. நேரில் முறைப்பாடு

Gotabhaya-Rajapaksa2பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்­, மாகாண சபைத் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளில் ஈடுபட்டமை சட்டவிரோதமானது எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரியவிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபை நேற்று நேரில் சென்று முறைப்பாடு செய்தது.

அத்துடன், நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் நடைபெறுவது சந்தேகத்திற்கிடமானது எனத் தெரிவித்த தலைமைத்துவ சபை, நீதியான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபையின் முறைப்பாட்டை ஏற்றுக் கொண்ட தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய, நீதியான தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபைத் தலைவர் கரு ஜயசூரிய தலைமையிலான குழுவினர் நேற்றுக் காலை 9.30 மணிக்கு தேர்தல்கள் ஆணையாளரை கொழும்பு ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் சந்தித்தனர்.

சுமார் ஒரு மணிநேரம் இடம் பெற்ற இந்தச் சந்திப்பில் ஐ.தே. கவின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ரவி கருணாநாயக்க ஆகியோர் உட்பட கட்சியின் மேல் மாகாண சபை வேட்பாளர்கள் பலரும் பங்கேற்றனர்.

இலங்கை மன்றக் கல்லூரியில் அண்மையில் இடம் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட குழுத் தலைவரும், ஜாதிகயஹல உறுமயவின் உறுப்பினருமான உதயகம் மன்பிலவின் தேர்தல் பரப்புரைக்கூட்டம் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்­ச தலைமையில் நடைபெற்றது.

பாதுகாப்புச் செயலாளர் இதன் போது உரையயான்றையும் நிகழ்த்தியிருந்தார்.
இவ்வாறு அரச உயர்மட்ட அதிகாரி ஒருவர் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு தெரிவித்து பரப்புரைகளில் ஈடுபடுவது தேர்தல் சட்டங்களை மீறும் செயல் எனத் தேர்தல்கள் ஆணையாளரிடம் தலைமைத்துவ சபை சுட்டிக் காட்டியுள்ளது.

கோத்தபாய ராஜபக்­ தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடலாம். ஆனால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தபாய ராஜபக்­ தேர்தல் பரிந்துரைகளில் ஈடுபட முடியாது.

இது தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் எனத் தேர்தல்கள் ஆணையாளரிடம் தாம் முறையிட்டதாக தலைமைத்துவ சபைத் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்தார். அதேவேளை, தேர்தல் பரிந்துரைகளுக்காக அரச வளங்கள் பயன்படுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணையாளரிடம் சுட்டிக்காட்டப்பட்டது என்றும் தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply