நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளில் நாம் எமது பிரதேசத்திலும் சிறுபான்மையாக்கப்பட வேண்டும் என்பதே நோக்கமாக உள்ளது. ஆகவே நல்லிணக்க ஆணைக்குவின் பெயரிலே அவ்வாறானதொரு பரிந்துரை இருப்பதென்றால் எமது இன அழிப்புக்கு உத்தியோகபூர்வமான அங்கீகாரத்தை கொடுப்பதாகவே இருக்கும். இந்த நல்லிணக்க பரிந்துரைகளைத்தான் ஜெனீவாவில் 2012 ஆம் அண்டும் 2013 ஆம் ஆண்டும் நல்லிணக்கம் என்ற பேரில் நிறைவேற்கப்பட்டுள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நான்காவது வருடாந்த பொதுக்கூட்டம் வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
எம் மீது குற்றச்சாட்டை சிலர் முன்வைக்கின்றனர். அதாவது ஒற்றுமையை நாம் பேண வேண்டும். இப்போது ஒற்றுமை தான் முக்கியம் என்று தெரிவித்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி அடையாளப்படுத்துகின்ற கொள்கை நடைமுறை சாத்தியமில்லாதவை என்றெல்லாம் கூறினர்.
அத்துடன் சிலர் நாம் தோற்றுப் போன ஓர் இனம் ஆகவே தோற்றுப் போன இனம் தமிழ் தேசிய முன்னணி கொண்டுள்ள கொள்கையை முன்னேடுக்க முடியாது. அடிபணிந்து தலை குனிந்து சிங்கள தேசத்தினுடைய கட்டளைக்கு இணங்க செயற்படுவது தான் புத்திசாலித்தனம் என கூறினார்கள்.
ஆனால் அன்றைக்கு தமிழ் தேசிய முன்னணி தேர்தலில் தோல்வியுற்ற போதிலும் கூட நாம் எமது நிலைப்பாட்டில் எந்தவித தளம்பலும் இல்லாமல் தோல்வியுற்றதன் பின்னரும் கூட எமது அறிக்கையில் கூறப்பட்ட எம்முடைய நிலைப்பாட்டை மக்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் வரும் காலத்தில் நாம் கூறும் உண்மைகளையும் அந்த ஜதார்த்தத்தையும் உணர்ந்து எம்மோடு இணைந்து ஒன்றாக பயணிப்பதற்கு அணி திரள்வார்கள் என்ற தெளிவான செய்தியை மிகத்தெளிவாக கூறியிருந்தோம்.
நான்கு வருடங்களுக்கு பிற்பாடு தமிழ் தேசிய மக்கள் முன்னிணியின் வருடாந்த கூட்டத்தில் வவுனியாவில் நூற்றுக்கணக்கான மக்களை உள்வாங்கக்கூடிய கட்டிடத்தில் அந்த கட்டிடம் நிரம்பும் அளவிற்கு இக் கூட்டம் நடைபெறுவது என்றால் அது அன்று நாம் கூறிய உண்மையின் வெளிப்பாடு.
நாங்கள் கூறிய அந்த உண்மை என்ன?. முதலாவதாக நாம் தோற்றுப்போன இனம் அல்ல என்பதும். மாறாக ஓர் இன அழிப்புக்கு உள்வாங்கப்பட்ட இனமாக உள்ள போதிலும் கூட அந்த இனத்தினுடைய எதிர்காலம் வளர்ச்சியடைவதற்குரிய வாய்ப்புகளே அதிகமாக உள்ளது என்பதே உண்மை. இதுவே எமது உண்மை.
ஆகவே நாம் கூறினோம் தயவு செய்து சோர்ந்து போகாதிர்கள் இது தான் எமது காலம். வரப்போகும் ஐந்து ஆறு வருடங்களுக்குள் நாம் தெளிவான உறுதியான நிலைப்பாடு எடுத்தால் நாம் எமது உரிமைப் போராட்டத்தை ஆயுத ரீதியாக பின்னடைவு இருந்தாலும் ஜனநாயக வழியிலும் அகிம்சை வழியிலும் முன்னெடுத்து செல்வது மட்டுமல்ல வெற்றி பெறும் வாய்ப்புகளையும் நாம் காணக்கூடியதாக இருக்கும் என கூறியிருந்தோம்.
இரண்டாவது உண்மை ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஒட்டு மொத்த சர்வதேச சமூகமும் ஒன்றிணைந்து இலங்கை அரசுக்கு முழு உதவிகளையும் வழங்கி எமது உரிமைப் போராட்டத்தை அழித்தது. ஆனால் அந்த செயற்பாடுகள் மே 2009 உடன் முடிவுக்கு வந்தது. இதே சர்வதேச சமூகம் பிரியும். எமது உரிமைப் போராட்டத்தை அழிப்பதற்கு ஒன்றிணைந்தாலும் எதிர்காலத்தில் இலங்கை அரசினுடைய செயற்பாடுகளின் ஊடாகவே அவர்களின் ஒற்றுமை பிரிந்து இலங்கை அரசை ஒரு பிரச்சனைக்குரிய தரப்பாக பார்க்கின்ற அளவிற்கு குறிப்பிட்ட சர்வதேச சமூகத்தினுடைய அங்கம் முடிவெடுக்கும் என நாம் தெரிவித்திருந்தோம்.
இலங்கை அரசை ஒரு பிரச்சனைக்குரிய தரப்பாக பார்க்கும் அந்த தரப்பு தமிழருடைய அரசியலையும் தமிழருடைய உரிமைப் போராட்டத்தையும் பயன்படுத்த தொடங்குவார்கள் என்ற மிகத் தெளிவான செய்தியையும் நாம் கூறியிருந்தோம். எமது 2010 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தை எடுத்து பார்த்தால் மிகத்தெளிவாக பக்கம் பக்கமாக சர்வதேச அரசியலை விளக்கப்படுத்தியுள்ளோம்.
இந்த இரண்டாவது உண்மையை நாம் கூறிய போது எங்களுக்கு எதிராக இருந்தவர்கள் அது அரச தரப்பாக இருக்கலாம் அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருக்கலாம். எம்மை பார்த்து நாம் கற்பனை உலகில் இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் இன்று என்ன நடைபெறுகின்றது. சர்வதேச மட்டத்தில் எமது உரிமைப் போராட்டத்தை தடை செய்த தரப்புகள் இந்தியாவும் மேற்குலக நாடுகளும் விடுதலைப்புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக குற்றம் சாட்டி தடைசெய்தது மட்டுமல்ல புலம்பெயர்ந்த மக்கள் இங்கு அழிந்து கொண்டிருந்த தங்களுடைய உறவுகளுக்கு உதவி செய்ய முடியாத அளவிற்கு அந்த தடைகளை பயன்படுத்தினார்கள்.
அந்த அளவிற்கு மோசமாக மேற்கு நாடுகள் செயற்பட்டன. இலங்கை அரசு கவனிக்காமல் எங்களை புறந்தள்ளிக் கொண்டிருக்க கொத்துக்கொத்தாக எம்மை சாவடிக்க கைகால் இழக்க வைக்க எங்களுடைய உறவுகள் தான் வெளிநாடுகளில் இருந்து எமக்கு உதவி செய்தார்கள். அந்த செயற்பாட்டை கூட தடைசெய்யும் அளவிற்கு மேற்கு நாடுகள் செயற்பட்டன.
ஆனால் இன்று போர் முடிந்து ஐந்து வருடங்களின் பின்னர் அந்த நிலைமை தலைகீழாக மாறியிருக்கின்றது. இலங்கை அரசு எதிரியாக மாறியிருக்கின்றது. தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட தரப்பாக ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு தமது முடிவுகளை மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இவற்றை எல்லாம் நான்கு வருடங்களுக்கு முன்பாகவே எமது மக்களுக்கு மிகத்தெளிவாக கூறியிருந்தோம்.
நிலைமைகள் மாறும் மேற்கு நாடுகளும் இந்தியாவும் தமிழ் அரசியலின் பக்கம் திரும்பவேண்டி வரும் இலங்கை அரசுக்கு எதிராக மாற வேண்டி வரும் அவ்வாறான நிலை வரும்போது தமிழ் தேசம் மிகத்தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருக்க வேண்டும். தெளிவானதும் உறுதியானதுமான நிலைப்பாட்டை கொள்ளாது விட்டால் நாம் வெறுமனே பாவிக்கப்பட்டு நடுத்தெருவில் விடப்படுவோம். அவ்வாறான நிலைமையை தவிர்ப்பது என்றால் நாங்கள் இன்றே எமது அரசியல் நிலைப்பாட்டில் தெளிவாகவும் உறுதியாகவும் செயற்பட தொடங்க வேண்டும் என்றே கூறி வந்திருக்கின்றோம்.
சர்வதேச மட்டத்தை நாம் எடுத்துப் பார்த்தால் எவ்வளவு தூரத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அன்று கூறிய கருத்துக்கள் இடம்பெறுகின்றது என்பதற்கு சான்றாகவுள்ளது. ஐநாவின் ஜெனீவா இரண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அந்த தீர்மானங்கள் என்ன?. அந்த இரண்டு தீர்மானங்களின் பொருள் நோக்கமும் நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலுமாக உள்ளது. நல்லிணக்கம் எனப்படும் போது சிங்கள தேசத்திற்கும் தமிழ் தேசத்திற்கும் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும். பொறுப்பு கூறல் என்றால் தமிழ் தேசத்திற்கு நடைபெற்ற நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இன அழிப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதாகும்.
தமிழருடைய பெயரைப் பயன்படுத்தி ஒரு தீர்மானம் கொண்டு வரப்படுகின்றது. ஆனால் உண்மையில் அந்த தீர்மானத்தில் என்ன இருக்கின்றது. சிங்கள தேசத்திற்கும் தமிழ் தேசத்திற்கும் தீர்வு எட்டப்பட்டு எமது சொந்த தேசத்தினுடைய அடையாளங்கள் பேணப்பட்டு சமத்துவமான அரசை உருவாக்கி அந்த அரசில் பங்கேற்பது அல்ல.
அங்கு ஆமோதிக்கப்பட்ட விடயம் இலங்கை அரசே நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதாகும். ஆனால் அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் என்ன கூறப்பட்டுள்ளது. அதில் சில சாதகமான அம்சங்களும் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக இராணுவத்தை சற்று குறைக்க வேண்டும். மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட வேண்டும். வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட வேண்டும். பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்ற நல்ல விடயங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆனால் இன்னொரு முக்கிய விடயமும் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது இலங்கை தீர்வு எதிர்காலத்தில் எவ்வாறு அமையவேண்டும் என்ற யோசனையும் பரிந்துரையாக சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது 2020 ஆம் ஆண்டளவில் இலங்கையின் எந்தவொரு பிரதேசமும் இன ரீதியாக பிரிக்க முடியாத அளவிற்கு அமைய வேண்டும் என்பதாகும். அதாவது இலங்கையிலே இனம் சார்ந்து பார்க்க கூடிய ஒரேயோரு பிரதேசம் தமிழர் தாயகமாகும்.
75 வீதமான சனத்தொகையை கொண்ட இலங்கையில் வாழும் சிங்கள பௌத்த பெரும்பான்மை இலங்கையில் இருக்கத்தக்கதாக அவர்களுடைய பெரும்பான்மை காலகாலமாக இல்லாத பிரதேசமான வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் 2020 ஆம் ஆண்டு இப் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழர் தயாகம் என்ற பிரதேசம் இருக்க முடியாது. இருக்கவும் கூடாது என்பதாகும். இதன்மூலம் நாம் எமது பிரதேசத்திலும் சிறுபான்மையாக்கப்படவேண்டும் என்பதே அதன் நோக்கமாக உள்ளது.
ஆகவே நல்லிணக்க ஆணைக்குவின் பெயரிலே அவ்வாறானதொரு பரிந்துரை இருப்பதென்றால் எமது இன அழிப்புக்கு உத்தியோகபூர்வமான அங்கீகாரத்தை கொடுப்பதாகவே அது இருக்கும். இந்த நல்லிணக்க பரிந்துரைகளைத்தான் ஜெனீவாவில் 2012 ஆம் அண்டும் 2013 ஆம் ஆண்டும் நல்லிணக்கம் என்ற பேரில் நிறைவேற்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஜெனீவா எங்களுக்கு கிடைத்துள்ள நல்ல சந்தர்ப்பம். அதனை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும். அந்த சந்தர்ப்பத்தில் வர இருக்கின்ற தீர்மானம் தமிழ் தேசிய மக்கள் முன்னிணியும் தமிழ் மக்களும் ஆதரிக்க கூடிய தீர்மானமாக அமைவதற்கு முதலாவதாக தமிழினத்திற்கு இடம்பெற்றது இன அழிப்பு என்பதனை அடையாளப்படுத்த வேண்டும். அந்த இன அழிப்பு தொடர்ந்தும் இடம்பெற்றுக் கொண்டு இருப்பதாகவும் அதனை அடையாளப்படுத்த வேண்டும். வெறுமனே போர்க்குற்றம் என்றும் அந்த போர் இடம்பெற்ற கடைசி மூன்று வருடங்களையும் விசாரிக்கும் வகையில் அந்த தீர்மனம் நிறைவேற்றப்பட்டால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அந்த தீர்மானத்தை எதிர்க்க வேண்டும் என்பதுவே எங்களுடைய கருத்தாகும்.
அடுத்த விடயமாக சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை பிரித்தானிய அரசு இலங்கை தீவில் இருந்து வெளியேறிய காலத்தில் இருந்து இற்றை வரைக்கும் நடைபெறும் முழு விடங்களையும் விசாரணை செய்வதாக அது இடம்பெற வேண்டும். வெறுமனே கடைசி மூன்று வருடங்களையும் விசாரிப்பதாக இருந்தால் அத் தீர்மனத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அத்துடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்டமிட்ட இன அழிப்பை தமிழ் தேசத்தை இல்லாது ஒழிக்கின்ற இச் செயற்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்ககூடியவகையிலே சர்வதேச சமூகத்தினுடைய பாதுகாக்கும் பொறுப்பை பயன்படுத்தி தமிழர் தாயக பிரதேசத்தில் சர்வதேச சமூகத்தினுடைய விசேடமாக ஐ.நாவினுடைய கண்கானிப்பிலே இடைநிலை நிர்வாகமொன்றை ஏற்படுத்த வேண்டும்.
அத்துடன் சிறிலாங்கா அரசுடன் பேச்சுவார்த்தையூடாக ஓர் தீர்வை எட்டவதற்கு நாங்கள் ஓர் நியாயமான காலஅவகாசத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் அந்த கால அவகாசத்திற்கு பிற்பாடும் இன்றைக்கும் செயற்படுகின்ற அதேவகையிலே சிறிலங்கா அரசு தொடர்ந்தும் செயற்பட்டால் சர்வதேச சமூகத்தினுடைய நேரடி தலையீட்டின் பிரகாரம் தாயகத்தில் வாழும் ஈழத்தமிழர் மட்டுமல்ல புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் பங்களிப்புடன் ஜனநாயக உரிமையின் அடிப்படையிலே ஓர் சர்வதேச பொறிமுறையின் பிரகாரம் எங்களுடைய மக்களின் உண்மையான அரசியல் அபிலாசைகள் என்ன என்பதனை அறியக்கூடியவகையிலே பொறிமுறையொன்றை உருவாக்கி நிரந்தர தீர்வை தமிழ் மக்கள் தீர்மானிக்க கூடிய வகையில் சர்வதேச சமூகம் திட்டமொன்றை அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
















