இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஜனாதிபதி யுத்த நிறுத்தமொன்றிற்கு செல்ல விரும்பினார் – சரத் பொன்சேகா
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்த நிறுத்தமொன்றிற்கு செல்ல விரும்பியதாக ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
2009ம் ஆண்டின் முதல் நான்கரை மாதக் காலப்பகுதியில் யுத்தம் உச்ச கட்டத்தை அடைந்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தெல்கொட மாகொல பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் கூட்டமொன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளின் அழுத்தம் காரணமாக நாட்டின் ஆட்சியாளர் யுத்த நிறுத்தமொன்றை செய்ய விரும்பினார் எனவும், தாம் அதற்கு இடமளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த காலத்தில் யுத்த நிறுத்தமொன்றை மேற்கொண்டிருந்தால் பிரபாகரன் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருப்பார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்லாயிரக் கணக்கான படைவீரர்களின் அர்ப்பணிப்பும் தியாகமுமே யுத்த வெற்றிக் காரணம் எனவும், திருட்டு அரசியல்வாதிகள் எவரும் யுத்த வெற்றிக்கு பங்களிப்பு வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அழுத்தங்கள் காரணமாக இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற காலத்தில் படையினர் பின்வாங்க நேரிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுளளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மேலும் மூன்று கிலோ மீற்றர் தூரம் பின்வாங்கியிருந்தால் பிரபாகரன் தப்பிச் சென்றிருப்பார் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஆட்சியாளர் குடும்பம் ராஜ போகங்களை அனுபவிக்கும் அதேவேளை, சாதாரண மக்கள் சொல்லொனா துயரங்களை அனுபவித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டின் 90 வீதமான வளங்களை நாட்டை ஆட்சி செய்யும் ஆட்சியாளரின் குடும்பத்தினர் அனுபவித்து வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
















