பாலு மகேந்திரா- ஒளி இழந்த வானவில்!

balu_mahendraபாலு மகேந்திரா என்ற ஒப்பற்ற ஒளி இயக்குநன், கதையாளன், நேர்ந்த இயக்குநன் மறைந்து விட்டார் என்றது போன வாரத்தின் இணையச் செய்திகள்.
பாலு மகேந்திரா..நாங்கள் பார்த்து பார்த்து பழகிப் போனதும் நாங்கள் ஒரு கணம்கூட நின்று ரசிக்க மறந்ததுமான இயற்கை காட்சிகளை எப்படி ரசிப்பது என்ற சூத்திரம் சொல்லிதந்த ஒளிப்பதிவாளன்.

அதிகாலை பனிமூட்டத்தை ஊடுருவி உள்பாயும் ஒளிவீச்சின் தருணங்களில் புல்லின்மீது அமர்ந்திருக்கும் பனித்துளியை வெள்ளித்திரையில் அழகாக காட்டிய கலாரசிகன்.

80களின் நடுப்பகுதியில் வெளிவந்த நீங்கள் கேட்டவை படத்தில் ஒரு காட்சி….’கனவுகாணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் மேகங்கள்’ என்ற பாடல் சங்கராபரணம் சோமயாலு பாடுவதாக வரும் காட்சி அது.ஜேசுதாசின் அற்புதமான குரல்..எல்லோரும் பாடலுக்குள் அமிழ்ந்து செல்லும் வேளையில் திடீரென மலைகளின் கீழே மேகங்களுக்குள்ளாக புகுந்துவரும் ஒளிச்சிதறலில் அருவிகள் தகதகக்கும் காட்சி இது எல்லாவற்றையும் தூக்கி எங்கேயோ கொண்டுசென்று விடுகிறது….திரைப்படத்தை பார்க்கும்போதே அதனுடாக காட்சிகளையும் ஒளிப்பதிவையும் ரசிக்க ஆரம்பித்த ஒரு தலைமுறையை உருவாக்கிய ஆசான் பாலு மகேந்திரா..

நான் பார்த்த தமிழ்படங்களில் முதன்முறையாக திரைஅரங்கில் ஒளிப்பதிவுக்காக எழுந்துநின்று எல்லோரும் கைதட்டிய காட்சி அது…

இதனைப் போலவே ஒளிச்சேர்க்கை தொழில்நுட்பம் மிகவும் முன்னேறி இருக்காத 1974களில் வெளிவந்த ராமுகாரியத்தின் நெல்லு படத்தின் காட்சிகள் இன்றும் பாலுமகேந்திரா என்ற ஒப்பற்ற ஒளிமேதையின் நுட்பங்களை விழிவிரிய பார்க்க ரசிக்க வைக்கிறது..

எப்போது ராமுகாரியத் பாலு மகேந்திராவை அணுகுகிறார் என்று பாருங்கள். தகழி சிவசங்கரன்பிள்ளையின் நாவலை செம்மீன் என்ற பெயரில் திரைப்படமாக இயக்கி மலையாள ரசிகர்களை மட்டுமல்லாமல் தென்னிந்தியா, இலங்கை என்று வெற்றிப் படமாக்கி சிறந்த திரைப்படமாக இந்திய விருதும், சிக்காகோ நகரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் பராட்டு என்று உச்சிக்கு சென்ற பின்னர் தனது அடுத்த படமான நெல்லு க்கு பாலு மகேந்திராவை ஒளிப்பதிவாளராக ஆக்குகிறார்.

பாலு மகேந்திரா தனது திரைப்பட கல்லூரி பரீட்சைக்கு எடுத்த ஆவணபடத்தின் ஒளிப்பதிவில் மயங்கியே ராமுகாரியத்த தனது நெல்லு படத்துக்கு இவரை நியமித்தார்.

செம்மீனில் ஒளிப்பதிவாளராக வேலைசெய்த மார்குஸ் பற்றேலி க்கு பதிலாக பாலு மகேந்திராவுக்கு இந்த இடம் கிடைத்தது அப்போதே அவருக்கான ஒரு பெரிய ஆரம்பமாக இருந்தது. (இந்த மார்க்குஸ் பற்றேலி 1978ல் கான்ஸ் திரைவிழாவில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான (செம்மீன்) தங்க விருதும்,சாந்தி நிலையம் படத்துக்கு சிறந்த இந்திய ஒளிப்பதிவாளர் விருதும் பெற்றவர்)

மன்னரை பாடுவதும்,பண்டிததனமாக எழுதுவதுமாக சாதாரண மக்களுக்கு எட்டாததாக இருந்துவந்த தமிழ்மொழியை எல்லோரும் ரசிக்கவும் எல்லோருக்குமான செய்தி சொல்லும் ஊடகமாக கொண்டு வந்தவன் பாரதி என்றால்
வெறும் நிறங்களின் திரட்சியும், வண்ணக்கலர் மயமாக இருந்த திரைமொழியை திரைஒளியை எல்லோரும் ரசிக்கும் விதமாக ஆக்கியவர் பாலு மகேந்திரா..

அவன் எட்டயபுரத்திலிருந்து வந்தவன். இவரோ தமிழீழத்தின் மட்டக்களப்பின் அமிர்தகழியில் இருந்து வந்தவர்.

சொந்தமாக ஒரு குடில் அல்லது வீடு நடுத்தரக் குடும்பங்களின் ஒரு கனவு அல்லது இலட்சியம்.

அதனை அடைய பாடுபடும், ஏறத்தாள போராடும் ஒரு குடும்ப கதையாக அவர் படைத்த ‘வீடு’ படமும் சந்தியாராகமும் அவரது அற்புத படைப்புகள்.

1985 என்று நினைவு… சென்னையின் நேரு ஸ்ரேடியத்தில் மிகப்பெரிய கலைநிகழ்ச்சி ஒன்று..தமிழ்திரைஉலகின் நட்சத்திரங்கள் அனைத்தும் ஒன்றுகூடி மேடைஏறும் நட்சத்திர நிகழ்வு..தமிழீழ விடுதலைப் புலிகளின் மாணவர் அமைப்பினால் நடாத்தப்பட்ட இந்த நிகழ்வை முன்னின்று ஒழுங்கு செய்தவர் அந்த நேரத்தைய தமிழக ஆஸ்தான கவிஞரான புலமைப்பித்தன் ஐயா அவர்கள்.

அரங்கு நிறைந்த நிகழ்வு அது.அந்த நிகழ்வில் எல்லா கலைஞர்களும் பேசினார்கள், பாடினார்கள்…

ஆனால் பாலு மகேந்திரா என்ற கலைஞனின் முறையும் வந்தது. அதே தொப்பியுடன் மேடை ஏறினார்.

மிகவும் ஆணித்தரமான குரலில், உறுதி நிறைந்த குரலில் இரண்டு வசனங்களே பேசினார்.

தமிழீழம் என்பது இன்றைய கனவு அல்ல.. நாளைய நிஜம்’ என்று.

அன்றைக்கு அந்த நிகழ்வு முடிந்து இன்று முப்பது வருடமாகிறது. அதில் பேசப்பட்ட மற்றையவர்களின் பேச்சு ஏறத்தாழ மறந்தே போய்விட்டது. ஆனாலும் பாலு மகேந்திராவின் அந்த பேச்சு இன்னும் நினைவில் இருக்கிறது.

இதுதான் பாலு மகேந்திரா…இந்திய மத்திய அரசின் ஈழத் தமிழினம் சார்ந்த கொள்கை வகுப்பு, தமிழக அரசின் நிலை என்பனவற்றால் அதற்கு பிறகு அதிகமாக அந்த கலைஞன் வெளிப்படையாக குரல் தராவிட்டாலும் அவருக்குள்ளே ஒரு தமிழீழ தேசத்தவன் எப்போதும் உயிர் வாழ்ந்து கொண்டே இருந்தான்..

என்னதான் கூண்டுக்குள்ளோ, இல்லை வேறு இடத்தில் இருந்தாலும் காடு மறக்காதாம் சிங்கம்.அதன் மனத்தில் எப்போதும் காடு வாழ்ந்து கொண்டே இருக்குமாம்.

அதைப் போலவே பாலு மகேந்திரா என்ற கலைஞனுக்குள்ளும் தமிழீழத்தவன் என்ற நினைப்பும் தனது தாயகம் விடுதலை ஆதல் வேண்டும் என்ற கனவும் எப்போதும் இருந்தே வந்துள்ளது.

என்னதான் தடா பொடா மற்றும் கியூ காவல்துறை அழுத்தங்கள் இருந்தாலும் இந்த உணர்வு பல வேளைகளில் அவரை மீறி வெளிவந்திருப்பதை காணமுடிந்தது.

அவருக்குள்ளே பல மேதமைத் தனங்களும் ஆற்றல்களும் இருந்தாலும் அவருடைய மிக முக்கியமான ஒரு இயல்பு அவர் அழகியலின் அதி ரசிகன். அதற்குள்ளாகவே அவரது அனைத்து மற்றைய ஆற்றல்களும் செதுக்கப்பட்டன.

அவருடைய திரைப்படங்களில் காட்சிஒன்று உணர்வுபூர்வமாக நகர்ந்து கொண்டிருக்கும் போதே ஒரு பிரேமில் திடீரென மரத்தின் இலைகளுக்குள் நின்று அசையும் குரங்கு ஒன்றோ, மழைத் துவானத்தில் தூரமலைகளுக்கு அப்பால் தோன்றும் வானவில் ஒன்றோ, கவுகளின் இடுக்குகளுக்கூடாக விழி விரிய பார்க்கும் குழந்தை ஒன்றோ எதுவோ வந்து அந்த காட்சியின் வலுவை இன்னும் அதிகமாக்கி செல்லும்.இது பாலு மகேந்திராவின் ஒருவிதமான கவித்துவம். இது அவருக்கே உரிய ஒருவிதமான கமேரா மொழி.

2010ம் ஆண்டுக்கான இந்திய சாகித்திய விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடனை பாராட்டி நடைபெற்ற விழாவில் 2011 ஜனவரி 3ம்திகதி பேசிய பாலுமகேந்திரா அதில் சொன்னது போலவே அவர் தன்னுடைய திறமைகளுக்கும் அறிவுக்கும் ஒரு எல்லை போட்டு ஓய்ந்திருந்தவர் அல்ல..

அவரின் மொழியிலே சொல்வதானால் அவர் ஒரு வெறிகொண்ட வாசகன்…அவர் தன்னை ஒரு வாசகன் என்று சொல்வதைவிட உபாசகன் என்றே அடிக்கடி சொல்வதை கருத்தரங்குகளில் பார்த்து இருக்கலாம்.

அந்த வாசிப்பு என்பதை அவர் இறுதிவரை நிறுத்தவேயில்லை என்பது அவரது வாழ்வில் இருந்து தெரிகிறது..

யார் கண்டார்கள் இப்போதும் வானுலகில் இருந்து பூமியின் அழகை அவருக்கே உரிய அழகியல் கண்ணோடு பார்த்துக் கொண்டிருப்பார்.

பாலு மகேந்திராவின் ஒரு திரைப்படத்தில் வரும் பாடலின் ஒருவரி சொல்வதுபோல

‘ என்நாளும் நம்மைவிட்டு போகாது வசந்தம்’

Tags: , ,

Leave a Reply