ராஜீவ் காந்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை இந்திய அரசு ஏற்கும்

rajivஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவர் மீதான தூக்கு தண்டனையை இரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்ட இந்திய மத்திய அமைச்சர் கபில் சிபல்,

ராஜீவ் காந்தி கொலையில் ஈடுபட்டவர்களுக்கு எவ்வித சலுகையும் அளிக்கப்படக் கூடாது என்பதே அட்டர்னி ஜெனரலின் வாதமாக இருந்தது. ஆனால் தற்போது நீதிமன்றம் ஒரு முடிவை எடுத்து தீர்ப்பை அறிவித்துள்ளது.

விருப்பம் இருக்கிறதோ இல்லையோ நீதிமன்ற தீர்ப்பை மதித்து நடந்தாக வேண்டும். எனவே மத்திய அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று நடக்கும்.

மேலும் இதுபோன்ற தீர்ப்புகள் தீவிரவாதிகளுக்கு சாதகமாகி விடக்கூடாது. நான் இதை யாருக்கும் எதிராக சொல்லவில்லை. அப்சல் குரு தூக்கிலிடப்பட வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பா.ஜ.க.வினர், ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை இரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

அப்சல் குரு தூக்கு தண்டனை நிறைவேற்ற காலம் தாழ்த்தப்பட்டபோது அரசு தீவிரவாதத்தை ஒடுக்குவதில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என விமர்சித்த பா.ஜ.க. இப்போது ராஜீவ் கொலை வழக்கு தீர்ப்பில் மட்டும் மெனனத்தை கடைபிடிப்பது ஏன்? எனவும் கபில்சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளின் விடுதலைக்கு ராகுல் காந்தி அதிருப்தி:-

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழ்வர் விடுதலை செய்யப்பட்டமைக்கு, ராகுல் காந்தி அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கு காங்கிரஸ் கட்சியினர் தங்களது அதிருப்தியினை வெளிப்படுத்தி வருகின்றனர். இது குறித்து அமேதி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில்,

‘நான் மரண தண்டனைக்கு எதிரானவன். மரண தண்டனை விதிப்பதால், என் தந்தையும் திரும்ப வரப்போவது இல்லை. ஆனால், ஒரு நாட்டின் பிரதமரை கொன்றவர்களையே தண்டிக்காமல் விட்டால் பின்னர் சாதாரண மக்கள் அரசிடம் இருந்து நீதியை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

ராஜீவ் காந்தி என் தந்தை என்பதற்காக இதை நான் சொல்லவில்லை. நாட்டின் நலனுக்காக மட்டுமே சொல்கிறேன். ஏனெனில், சட்டம் அனைவருக்கும் பொதுவானது. இதை நான் உங்கள் முடிவிற்கே விடுகிறேன்’ என்றார்.

Tags: , , , ,

Leave a Reply