ராஜீவ் காந்தி கொலை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானித்து இருப்பது, அவசரப்பட்டு எடுக்கப்பட்ட தவறான முடிவு என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறினார்.
தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து கோர்ட்டை அணுகுமாறு மத்திய அரசை காங்கிரஸ் கேட்டுக்கொள்ளுமா? என்று கேட்டதற்கு, பதில் அளிக்க மறுத்த அவர், அவசரப்பட்டு எடுக்கப்படும் முடிவுகள் நீதித்துறையின் ஆய்வுக்கு உட்பட்டவை என்று மட்டும் கூறினார்.
தண்டனையை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உள்ளது என்ற போதிலும், அது அரசியல் சட்டத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் அபிஷேக் சிங்வி தெரிவித்தார்.
இந்த தேசம் தீவிரவாதத்துக்கு ஒரு முன்னாள் பிரதமரை மட்டுமின்றி தமிழர்கள் உள்பட 17 இந்திய பிரஜைகளையும் இழந்து இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது என்றும் அப்போது அவர் கூறினார்.
தமிழக அரசின் முடிவு மிகுந்த வருத்தம் அளிப்பதாக உள்ளது என்று கூறிய மத்திய மந்திரி ராஜீவ் சுக்லா, இந்த பிரச்சினையில் மிகுந்த அவசரம் காட்டுவது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
இது முன்னாள் பிரதமர் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால் தமிழக அரசு ஒரு தடவைக்கு இரு தடவை யோசிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
















