பேரறிவாளனுக்கு திருமண ஏற்பாடு

petarivalan-fatherசிறையில் இருந்து விடுதலையாகும் பேரறிவாளனுக்கு திருமண ஏற்பாடு செய்வதாக அவரது தந்தை கூறினார்.

கிருஷ்ணகிரியில் பேரறிவாளனின் தந்தை ஞானசேகரன் என்கிற குயில்தாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்வதாக சட்டசபையில் அறிவித்தது, கண்ணே இல்லாத ஒருவனுக்கு கண் பார்வை வந்தால் எப்படி இருக்குமோ அதுபோல் மகிழ்ச்சியாக உள்ளது.

நான் ஒரு கட்டத்தில் துவண்டுவிட்டேன். எனது மகனும், நமக்கு யாரும் இல்லை. நாம் தான் நம்மை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என கூறினான். இதனால் எனது மனைவி ஒரு போராளியாகவே மாறிவிட்டார்.

சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகளை தூக்கு தண்டனையில் இருந்து விடுவித்தார்கள். ஆனால் வடமாநிலத்தில் திடீரென 2 பேரை தூக்கில் போட்டார்கள். இதனால் எனது மகனையும் தூக்கில் போட்டுவிடுவார்களோ? என பயந்து கொண்டே இருந்தேன்.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான நீதிபதிகள் எனது மகனின் தூக்குதண்டனையை ஆயுள்தண்டனையாக குறைத்தனர். அந்த செய்தியை கேட்டதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

அதன்பின் என்னை தொடர்பு கொண்ட வக்கீல்கள்,நண்பர்கள் அனைவரும் பேரறிவாளன் விடுதலை ஆவதற்கு இன்னமும் 6 மாதமோ அல்லது ஒரு வருடமோ ஆகலாம் என கூறினார்கள்.
ஆனால் இன்று (நேற்று) காலை திடீரென தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் பேரறிவாளன் உள்பட 7 பேரும் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்கள் என அறிவித்தார்.

அதை நான் டி.வி.யில் பார்த்ததும் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு வழங்கிய மகிழ்ச்சியை கொண்டாடி வந்த வேளையில், அடுத்த சில மணி நேரத்தில் தமிழக முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்பு எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

எனது மகன் பேரறிவாளன் நீண்டகாலம் தனது வாழ்நாளை சிறையிலேயே கழித்துவிட்டார். சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் பேரறிவாளனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துவருகிறோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Tags: , ,

Leave a Reply