ராஜிவ் கொலையாளிகள் விடுவிக்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. ராஜிவ் கொலையாளிகள் 7பேர்களின் இது தொடர்பாக தமிழக அரசின் பதிலை 2 வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரிவு 432ன் படி குற்றவாளிகள் சிறையில் இருந்த காலம் அடிப்படையில் மாநில அரசு முடிவு செய்யலாம். என்ற சட்ட ரீதியான விஷயம் இன்று கோர்ட்டில் முக்கிய பிரச்னையாக இருந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு உரிய வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றும், இதனால் விடுதலைக்கு தடை விதிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு மத்திய அரசின் சி.பி.ஐ., விசாரித்த வழக்கு என்பதால் மாநில அரசு மத்திய அரசுடன் கலந்து பேசித்தான் முடிவு செய்ய முடியும். ஆனால் தமிழக அரசு தன்னிச்சையாக முடிவு எடுத்தது தவறானது என்றும் மத்திய அரசு மூலம் எடுத்துரைக்கப்பட்டது.
ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்வதில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வழக்கறிஞர் மோகன்பராசரன் மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்தார். ராஜிவ் கொலையாளிகளை மாநில அரசு , மத்திய அரசை கலந்து ஆலோசிக்காமல் முடிவு எடுத்துள்ளது. இதற்கு மாநில அரசுக்கு உரிமை கிடையாது. நீதி வழங்கும் உரிமை விஷயத்தில் தமிழக அரசு செயல்பாடு சரியல்ல. மனுவை ஏற்று கொண்ட நீதிபதிகள் மதியம் விசாரித்தனர்.
ராஜிவ் கொலையாளிகள் 3 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பது மத்திய அரசையும் காங்கிரசையும் பெரும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தமிழக அரசின் முடிவிற்கு எதிராகவும், கடந்த 18 ம்தேதி சுப்ரீம் கோர்ட் விதித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரவும் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டை அணுகும் என தெரிகிறது. இது தொடர்பாக முடிவு எடுப்பதற்கென பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை அவசரமாக கூடியது. இது குறித்து மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் வாகனவதியிடம் அரசு சட்ட யோசனை கேட்டுள்ளது. மேலும் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர்.
ராஜிவ் கொலை வழக்கில் மரணத்தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன், ஆகிய 3 பேர் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் தூக்கை ரத்து செய்து கடந்த 18ம் தேதி தீர்ப்பளித்தது. ஜனாதிபதியிடம் நிலுவையில் இருந்த கருணை மனு மீது முடிவு எடுப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தை ஏற்று இவர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக தீர்ப்பளித்தது. மேலும் இவர்கள் சிறையில் இருந்த காலத்தை கணக்கில் கொண்டு விடுதலை செய்வது குறித்து மத்திய , மாநில அரசுகள் முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்தது.
இதனையடுத்து தீர்ப்பு வெளி வந்த மறுநாள் ( நேற்று) தமிழக அமைச்சரவை கூட்டத்தை ஜெ., அவசரமாக கூட்டினார். இதில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வது என்று, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார். மேலும் 3 நாட்களுக்குள் மத்திய அரசு உரிய பதில் அளிக்காவிட்டால் நாங்களே முடிவு எடுப்போம் என்றும் ஜெ., கெடு விதித்தார்.
இந்த தமிழக அரசின் முடிவு குறித்து கருத்து தெரிவித்த ராஜிவ்மகனான காங்., துணை தலைவர் ராகுல் கவலை தெரிவித்தார். ஒரு பிரதமரை கொன்றவர்களுக்கே இப்படி கருணை தெரிவித்து தண்டிக்காமல் விட்டு விட்டால் சாமானியமனிதனினுக்கு எப்படி நீதி கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் மத்திய அமைச்சரவை, மத்திய உள்துறை அதிகாரிகள், தலைமை வழக்கறிஞர்கள் ஆகியோர் டில்லியில் அவசர ஆலோசனை நடத்தி வனர். இதில் ராஜிவ் கொலையாளிகள் 3பேரை தப்பிக்க விடக்கூடாது என்பதற்கான சட்ட நடவடிக்கைகளில் மத்திய அரசு முழு அளவில் இறங்கியுள்ளது.
1991 மே 21: ஸ்ரீபெரும்புதூரில், தாணு எனும் மனித வெடிகுண்டால், ராஜிவ் கொலை.
1998 ஜன., 28: முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 26 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
1999 அக்., 17: தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி விண்ணப்பித்த கருணை மனு, கவர்னரால் நிராகரிப்பு.
2000 ஏப்., 26: தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி, ஜனாதிபதிக்கு கருணை மனு.
2011 ஆக., 26: ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், கருணை மனுவை நிராகரித்தார்.
2011 ஆக., 30: தூக்கு தண்டனையை ரத்து செய்யும்படி, சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம்.
2011 செப்., 9: மூவருக்கும் தூக்கு நிறைவேற்ற குறிக்கப்பட்ட தேதி. போராட்டம் மற்றும் சட்டசபை தீர்மானத்தால், தூக்கு தண்டனை நிறைவேறவில்லை.
















