ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உள்பட 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து அளிக்கப்பட்டத் தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்தது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் (18.02.14) தீர்ப்பளித்தது.
இந்த மூவரின் கருணை மனுக்களை பரிசீலிப்பது தொடர்பாக குடியரசுத் தலைவர் 11 ஆண்டுகள் கால தாமதம் செய்ததன் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை குறைப்பு செய்வதாக நீதிமன்றம் தெரிவித்தது.
அத்துடன், மூவரும் 23 ஆண்டுகளாக சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு, மாநில அரசு தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களை விடுவிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இதன் தொடர்ச்சியாக, ராஜீவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக, சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று (19.02.14) அறிவித்தது.
ஆனால், தமிழக அரசின் அந்த நடவடிக்கை எதிராக மத்திய அரசு இன்று தொடர்ந்த வழக்கில், ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
இந்த நிலையில், ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் மூவரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய மத்திய அரசு இன்று மனு தாக்கல் செய்தது.
ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தவுடன், அவசர அவசரமாக இந்த மறு ஆய்வு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்தது.
அதில், தண்டனையைக் குறைக்கும்போது வழக்கின் தன்மையைக் கருத்தில்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, இந்த மறுஆய்வு மனுவை 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.
இது தொடர்பான விசாரணை விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















