ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்த, நிலைப்பாட்டை முன்மாதிரியாகக் கொண்டு, இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் குற்ற தண்டனை கைதிகளுக்கும், நீதிமன்ற விசாரணைக் கைதிகளுக்கும், பொலிஸ் விசாரணைக் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கவேண்டும்.
இவ்வாறு இலங்கை அரசைக் கோருவதாக, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார். அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கத்தின் ஊடக மாநாடு கொழும்பில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளிகள் ஏழு பேருக்கு பொது மன்னிப்பு அளித்து விடுவிக்கப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு முன்னர் இந்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த மூன்று கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது.
சுமார் 25 வருடங்களாக சிறை வாசம் இருந்த இந்த அரசியல் கொலை குற்றவாளிகளுக்கு இன்று தமிழக அரசும், உயர் நீதிமன்றமும் நிவாரணம் வழங்கி இருப்பதை ஜனநாயக மக்கள் முன்னணி வரவேற்கின்றது.
மறந்து விட்டோம்
இலங்கை அரசு தானே உருவாக்கிய கற்றுக்கொண்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றத் தவறி விட்டது. மனித உரிமை மீறல்கள், அரசியல் தீர்வு ஆகியவை தொடர்பில் உலகுக்கு அளித்த உறுதிமொழிகள் எதையும் நிறைவேற்ற தவறிவிட்டது.
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக வெறுமனே காலத்தைக் கடத்தி வந்துள்ளது.
2009 ஆம் ஆண்டு மே மாதம் போர் முடிந்து சில நாள்களுக்குள் ஐ.நா மனித உரிமை சபையில், இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தைப் பற்றி யாரும் பேசுவது இல்லை.
அதை அனைவரும் மறந்து விட்டார்கள். அந்தத் தீர்மானம் ஏறக்குறைய இலங்கை அரசை, பயங்கரவாதத்தை ஒழித்தமைக்காகப் பாராட்டிக் கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஆகும்.
தார்மீக பொறுப்புண்டு
பயங்கரவாதத்தை ஒழித்தமைக்கு பாராட்டுத் தெரிவித்து விட்டு, தேசிய நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்கும்படி இலங்கை அரசை அந்தத் தீர்மானம் வலியுறுத்தியது.
போருக்கு முன்னின்று உதவி செய்து, பெருந்தொகையான அப்பாவி மக்களின் மரணங்களுக்குக் காரணமாக இருந்த மேற்கத்தைய நாடுகளும், இந்தியாவும் இத்தகைய ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டதில் உடன்பட்டன.
ஆகவே மேற்கத்தைய நாடுகளும், இந்தியாவும் தமக்கு எதிராகச் சதி செய்கின்றன என்று இலங்கை அரசு சொல்வது பொய். அவர்களும் ஒன்று சேர்ந்துதான் இலங்கையில் போர் செய்தார்கள். அதனால் தான் அவர்களுக்கும், இந்தியாவுக்கும் இலங்கை தொடர்பில் இன்று தார்மீக பொறுப்பு இருக்கின்றது.
உத்தமர் யாருமில்லை
இங்கே யாரும் உத்தமர்கள் கிடையாது. எல்லோரும் சேர்ந்து தமிழ் மக்களை சொல்லொண்ணாத் துன்பத்தில் அமிழ்த்தி விட்டார்கள். ஆகவே இன்று எல்லோரும் சேர்ந்து தான் நிவாரணம் தேட வேண்டும் என்றார்.
















