ஜேர்மன், பிரான்ஸ், போலன் நாடுகளைச் சேர்ந்த வெளிவிவகாரச் செயலர்கள், உக்ரைன் ஜனாதிபதி ஜானுகோவிற்ச்சை சமாதானப் பாதைக்கு அழைத்துவரும் முயற்சி எதுவும் இன்னும் முழுமையாகப் பயனளிக்கவில்லை.
மூன்று நாடுகளினதும் வெளிவிவகாரச் செயலர்கள், உக்ரைன் ஜனாதிபதியையும், எதிர்க்கட்சித் தலைவர்களான விற்றலி, அர்செனிஜ் இருவரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தினர். அரச வன்முறையை உடன் நிறுத்துதல், வாதாட்டத்துக்குரிய சகல வல்லமையையும் பொருந்திய அரசாங்க அமைப்பைக் கலைத்து எதிரணியினருடன் பேச்சுவார்த்தை நடத்த உடன்படல், இடைக்கால அரசினை உடனடியாக அமைத்து ஜனாதிபதித் தேர்தலையும் பாராளுமன்றத் தேர்தலையும் இந்த ஆண்டு நடத்தல், புதிய சட்ட அமைப்பிற்கான ஏற்பாடுகளைத் துரிதப் படுத்தல் போன்றவை பேச்சு வார்த்தையின் முக்கிய அம்சங்களாக அமைந்திருந்தன.
பேச்சு வார்த்தை இடம் பெற்றுக் கொண்டிருக்கும் வேளையிலும் துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்களும், மரண ஓலங்களும் கேட்டவண்ணம் இருந்தது.
சமாதானத்திற்கான நிபந்தனைகளை எதிரணியினர் முழுமையாக அங்கீகரித்தனர். உக்ரைன் ஜனாதிபதியிடமிருந்து எவ்வித பதிலும் இதுவரையிலும் கிடைக்கப் பெறவில்லை. பேச்சுவார்த்தையின் போது பூட்டினும் அங்கலா மேர்கலும் தொலைபேசி மூலம் ஜானுகோவிற்ச்சை தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுத்தனர்.
எதிரணிக்கு இடமளிக்காத வகையில் நகர்வுகள் அமைய வேண்டுமென ரஷ்ய ஜனாதிபதி பூட்டீனின் அழுத்தம் அமைந்திருந்தது. ரஷ்யாவின் பக்கபலம் ஜானுகோவிற்ச்சின் அதிகார அடக்குமுறைக்குத் துணையிருப்பதால் பிரச்சனைக்கான தீர்வு மிகத்தூரத்தில் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியமும்,அமெரிக்காவும் கருதுகிறது.
அரசாங்க அங்கத்தவர்கள் அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் பயணிக்க முடியாதவகையில் விசாக்கள் ரத்து செய்யப்பட்டும், அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்ட சகலரினதும் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.
முயற்சி நிச்சயம் பயனளிக்குமென்ற நம்பிக்கையைத் தவிர வேறெதுவும் பேச்சுவார்த்தைகள் மூலம் எட்டப்படவில்லையென ஜேர்மன் வெளிவிவகாரச் செயலர் பத்திரிகையாளருக்கு அளித்த செவியில் குறிப்பிட்டார்.
















