சர்வதேச தாய்மொழி தினத்தில் தமிழ் மொழியில் கடமையாற்றும் உரிமையை உறுதிப்படுத்துவோம்!

tamilenமாசி மாதம் (பெப்ரவரி) 21 சர்வதேச தாய்மொழித் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. வங்காள மொழியை அரசகரும மொழியாக ஆக்கக் கோரிய போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக மாசி மாதம் 21 திகதியை சர்வதேச அளவில் மொழி தொடர்பாக நினைவு கூறப்படும் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், சர்வதேச அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகளின் யுனெஸ்கோ அமைப்பு 1999 ஆம் ஆண்டு மாசி மாதம் 21திகதியை, சர்வதேச தாய் மொழித்தினமாக பிரகடனப்படுத்தியது. 2000 ஆம் ஆண்டு முதல் இத்தினம் உலகம் முழுவதும் சர்வதேச தாய்மொழித்தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த தினத்தில் உலகில் உள்ள 6000-7000 வரையான மொழிகளுள் ஒன்றாக உள்ள தமிழ்மொழியினைப் பேசிவரும் நாம் தமிழ் மொழியை இன்றைய சர்வதேச ரீதியான சவால்களுக்கு மத்தியில் எத்தகைய நோக்கில் முன் கொண்டு செல்லப்போகின்றோம் என்பது பற்றி ஆக்கபூர்வமாக சிந்திப்பது சிறப்பாக இருக்கும்.

இலங்கையை பொறுத்தவரை இரண்டு மொழிகளை பேசுகின்ற இனங்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தாலும் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற தமிழ், சிங்கள மக்களுக்கு இடையிலான இனப்பிரச்சினையானது தமிழ் மொழி பேசும் மக்களின் மொழி உரிமைபற்றி சிந்திப்பதற்கு தடையாக இருந்ததனால் தங்களது தாய்மொழியான தமிழ் மொழியை பிரகடனப்படுத்துவதில் பல்வேறு சிக்கலை எதிர்கொண்டனர்.

இதனால் கடந்த கால யுத்த அனுபவங்களினால் தமிழ் மக்கள் தமிழை பேசுவதற்கே அச்சம் கொண்டிருந்தாலும் இன்று தாய் மொழியில் கடமையாற்றுவதற்கான உரிமையை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதுடன் அதற்கான பல வேலைத்திட்டங்களையும் அமுல்படுத்தி வருகின்றமையின் காரணமாக தமிழ் மக்கள் தங்களது தாய் மொழி பற்றி சிந்திக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

இன் நிலையில் தமிழ் மொழியில் கடமையாற்றுவதற்கான உரிமைகளை தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற வடகிழக்கு மண்ணில் உறுதிப்படுத்துவதற்கு அனைவரும் செயலாற்ற வேண்டும் என்பதே தமிழ் பேசும் மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

இன்று தமிழ் மொழி பற்றிய விழிப்புணர்வுகள் எமது சகோதர இனமான சிங்கள மக்கள் மத்தியில் அதிகரித்துக் காணப்படும் அதே நேரம் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் மொழி பற்றிய விழிப்புணர்வுகள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு செயலற்றுக் கிடக்கின்றது.

இன்று தமிழ் மொழிப் பிழைகளை தென்னிலங்கையில் தேடிப்பிடித்து வெளிக்கொண்டுவரும் தமிழ் ஊடகங்கள் அந்த பிழைகள் எங்கு நடக்கக்கூடாதோ அங்கு நடைபெறுகின்றபோது அதனை கண்டுகொள்ளாமல் இருப்பது வேடிக்கையானது.

குறிப்பாக சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற பிரதேசத்தில் சிங்கள அதிகாரிகள் கடமையாற்றுகின்ற அலுவலகங்களில் தமிழ் பிழைகள் அல்லது தமிழ் மொழிக் கொலைகள் நடைபெறுவது சாதாரணமான விடயம் அது எதிர்காலத்தில் மாறக்கூடியது. ஆனால் தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தில் தமிழ் அதிகாரிகள் கடமையாற்றும் அலுவலகங்களில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால் அதுவே மிகப்பெரிய தவறான விடயமாகும்.

இன்று வடகிழக்கு தமிழ் மண்ணில் தமிழ் மொழிக் கொள்கை ஒன்று வகுக்கப்பட்டுள்ளதா? தமிழ் மொழிப் பிரகடனம் செய்யப்பட்டு எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா? செம்மையான தமிழ் மொழியை எமது அடுத்த சந்ததியினருக்கு கொண்டு செல்வதற்கான ஏதாவது வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா? என்ற கேள்விகளுக்கு பதிலளிக்க யாரும் தயாராக இல்லை.

தமிழ் மண்ணில் எதற்காக தமிழை வளர்க்க வேண்டும் நாம் எல்லோரும் தமிழ் பேசும் மக்கள் தானே என்று பலர் சிந்திக்க கூடும். ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று பாரதியார் கூறியதற்கு அமைய தமிழ் மொழியில் பாண்டித்தியம் பெறுவதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல உண்மையைச் சொல்லப்போனால் தமிழ் மக்கள் என்று சொல்லும் எல்லோருக்கும் தமிழ் மொழி குறித்தும் தமிழ் மொழியில் உள்ள சொல் வழக்குகள் குறித்தும் தெரியாதவர்களாகவே உள்ளனர் சுருங்கச் சொன்னால் தமிழர்களாகிய நாம் தமிழ் மொழி பற்றி முழுமையாக தெரியாதவர்களாகவே வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

இன்று தமிழ் மொழி உரிமை பாதிக்கப்படுவதற்கு யார் பொறுப்பு?

இன்றைய காலகட்டத்தில் இலங்கையை பொறுத்தவரை தமிழ் மொழி உரிமை பாதிக்கப்படுவதற்கு தமிழ் பேசும் சமூகம்தான் பொறுப்பேற்க வேண்டும். இன்று வடகிழக்கு மாகாணங்களை ஆட்சி செய்துகொண்டிருக்கின்ற இரண்டு முதலமைச்சர்களும் தமிழ் பேசும் இனத்தவர்கள் இவர்களுக்கு தங்களது தாய்மொழிமேல் ஏற்படாத ஆர்வத்தை சகோதர இனத்தவர்களிடம் கோருவது வேடிக்கையானது.

இன்று வரை தாய் மொழிக் பிரகடனம் சம்பந்தமாக கொள்கைகள், வேலைத்திட்டங்கள் மாகாணசபைகளிடமோ அல்லது உள்ளராட்சி சபைகளிடமோ அமுல்படுத்தப்பட்டுள்ளதா? என்ற கேள்வியும் ஆதங்கமும் தமிழ் சமூகத்திற்கு உண்டு. இன்று மொழி உரிமை பற்றியும், மும்மொழிக் கொள்கை பற்றியும், தமிழ், சிங்கள அரச கருமமொழிகள் பற்றிய கொள்கைகள் தொடர்பான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்தாலும் அது குறிப்பிட்ட அரசாங்கத்தின் அரசியல் பின்னணியையும்,தமிழ் சிங்கள மக்களின் இன நல்லுறவையும் வலுப்படுத்துவதாகவே அமைகின்றது. ஆனால் உணர்வு பூர்வமான தமிழ் மொழிக் கொள்கை ஒன்று வடகிழக்கு மண்ணில் இன்றுவரை அதிகாரபூர்வமாக உருவாக்கப்படவில்லை என்பதே கவலைக்குறிய விடயமாகவுள்ளது.

எனவே எமது தாய் மொழியைப் பயன்படுத்துவதற்கான உரிமையை இன்னுமொரு மொழிபேசும் சமூகத்திடம் இருந்து எதிர்பார்ப்பதும் எமது தமிழ் மொழி பிரகடனத்தை இன்னுமொரு மொழி பேசுபவர்கள் தருவார்கள் என்று எதிர்பார்ப்பதையும் விடுத்து தமிழ் மொழிக் கொள்கைப் பிரகடனம் ஒன்றை வடகிழக்கு தமிழ் பேசும் தலைமைகள் அமுல்படுத்தி அதற்குறிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதே அனைத்து தமிழ் மக்களினதும் எதிர்பார்ப்பாகவுள்ளது.

தமிழ் மொழியை பயன்படுத்தும் உரிமை எங்கு மறுக்கப்படுகின்றது

உண்மையில் தமிழ் மொழியை பயன்படுத்தும் உரிமைகள் மிகக் கூடுதலாக தமிழ் மண்ணிலேயே மீறப்படுகின்றது என்பதுதான் மிக வேதனையாகவுள்ளது. தமிழ் மண்ணில் தமிழ் பேசும் மக்களுக்காக கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் தமிழ் மொழிப் பற்றின்றி மேலைத்தேய கலாசாரத்தால் கவரப்பட்டவர்களாகவே இருக்கின்றனர்.

இன்று வடகிழக்கில் உள்ள அனைத்து அரச,தனியார் அலுவலகங்களில் காணப்படுகின்ற பெயர்ப்பலகைகள் மற்றும் இதர ஆவணங்கள் அனைத்திலும் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவதில்லை அவ்வாறு தமிழ் மொழிகளில் அவை எழுதப்பட்டிருந்தாலும் அது தமிழ் சொற்களாக இருப்பதில்லை என்பது பலருக்கு புரிவதில்லை இதைவிட வடகிழக்கில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் தமிழ் மொழியை பயன்படுத்துவதில்லை மாறாக தமிழ் மொழியில் எழுதப்படும் ஆங்கில சொற்களையே பயன்படுத்துகின்றனர் இதனால் இன்றுள்ள சிறுவர்கள் மேற்படி ஆங்கில சொற்களையே தமிழ் மொழி என்று கருதி அதனையே நாளாந்தம் பாவித்தும் வருகின்றனர். இது போன்ற செயற்பாடுகளே எமது தமிழ் மொழி அழிவுக்கு வழியமைத்துக் கொடுக்கின்றது. எனவே தமிழ் மொழியின் அழிவுக்கு எதிர்காலச் சமூகத்தைவிட நிகழ்காலச் சமூகமே காரணம் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இதை விட இன்று இலங்கையில் நடைமுறையில் உள்ள கல்வித் திட்டம் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை முற்றாக நீக்கியுள்ளது என்பதும் ஒரு வேதனையான விடயமாகவுள்ளது. முன்னர் கா.பொ.த உயர்தரத்தில் கலைப்பிரிவில் கல்வி பயிலும் மாணவர்கள் தமிழ் பாடம் கற்க வேண்டியது என்ற கட்டாயம் இருந்தது ஆனால் இன்று தமிழ் பாடம் முக்கியம் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளதாலும், தமிழ் பாடம் கற்பது மிகக் கடினமானது என்ற மாயை ஆசிரியர்களாலேயே உருவாக்கப்பட்டுள்ளதாலும் மாணவர்கள் பரீட்சையில் சித்தி பெறவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக தமிழ் பாடத்தை தமிழ் மாணவர்கள் புறக்கணிக்கின்ற துன்பியல் நிகழ்வு எமது வடகிழக்கு மண்ணில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது.

அடுத்து தென்னிலங்கையில் இருந்து வடகிழக்கிற்கு அனுப்பப்படும் சிங்கள மொழிக் கடிதங்களினால் அதனை மொழிபெயர்ப்பு செய்வதற்காக எடுக்கப்படும் கால தாமதங்கள் மேற்படி அனுப்பப்படும் கடிதங்களின் வேலைத்திட்டங்கள்; உரியநேரத்திற்கு அமுல்படுத்தப்படமுடியாமல் போவதுடன் தென்னிலங்கை அதிகாரிகளுடன் முரண்படவேண்டிய சங்கடங்களும் ஏற்படுவதாக அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

உண்மையில் கடந்த முப்பதாண்டுகால யுத்தத்தின் போது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னியில் தனித்தமிழ் பிரகடனப் படுத்தப்பட்டிருந்தமை உலகறிந்த விடயம் வன்னியில் உள்ள வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழ் மொழி மிடுக்கோடு தலைநிமிர்ந்து நின்றது என்பதுடன் தமிழ் மொழியை பேசுவது ஒரு கவர்பாடலாக கருதப்பட்டது அந்த காலகட்டத்தில் தமிழ் மொழியை சரியாகவும் நேர்த்தியாகவும் பேசவேண்டும் என்பதில் அனைத்து தமிழர்களும் ஆர்வம் காட்டினார்கள் என்பதும் யாவரும் அறிந்ததே.

எனவே தமிழ் பேசும் தலைமைகள் வரலாற்றில் இருந்து நல்ல விடயங்களை கற்றுக்கொண்டு அதனை சமூகத்திற்கு வழங்கவேண்டியது கட்டாயமாகும். குறிப்பாக எமது உரிமையான தாய் மொழியான தமிழ் மொழியை பயன்படுத்தும் உரிமையை உடனடியாக வடகிழக்கு மண்ணில் அமுல்படுத்த வேண்டும்.

என்று ஒரு இனம் தனது தாய்மொழியை பயன்படுத்துவதில் திருப்தி அடைகின்றதோ, எங்கு ஒரு இனம் தாய்மொழிக் கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றதோ அந்த இனம் உலகில் உள்ள எல்லா இனங்களையும் தனது தாய்மொழியை கற்பதற்கு தூண்டுகின்றது என்பதே யதார்த்தமாகவுள்ளது. உதாரணமாக சீனா,தாய்லாந்து போன்ற நாடுகளை கூறலாம் மேற்குறிப்பிட்ட நாடுகள் தங்களது நாடுகளில் கணனி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தங்களது தாய்மொழியையே பயன்படுத்துகின்றனர் இதனால் அங்கு செல்லும் நாம் அவர்களது மொழிகளை கற்பதற்கு தூண்டப்படுகின்றோம் என்பதுடன் அவர்களின் தாய்மொழிகளின் தனித்துவம் அவர்களை தன்னிறைவான பொருளாதார வளர்ச்சிக்கும் தூண்டியுள்ளது.
தாய்மொழியின் அடையாளங்கள் அந்த மொழியை உலகறியச் செய்யவேண்டும் என்ற உணர்வுகளை ஏற்படுத்துவதால் தனித் தாய்மொழியை பயன்படுத்தும் இனங்கள் உலக வரலாற்றில் வளர்ச்சியடைந்த சமூகமாக மாற்றமடையும் என்பது வரலாறாகவுள்ளது.

தமிழ் மொழியை எங்கு? எவ்வாறு? யார்? பிரகடனப்படுத்தலாம்

இன்று இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் வாழுகின்ற பிரதேசங்களில் உள்ள அரச திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகள் போன்றன தங்களுக்குள்ளேயே ஒரு தமிழ் மொழிப் பிரகடனத்தை அமுல்படுத்தி எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற கொள்கையினை வகுத்து செயற்படுவதே நடைமுறைச் சிக்கலற்ற தமிழ் மொழி வளர்ச்சிக்கு முதல்படியாக அமையும்.

மிக முக்கியமாக ஆங்கிலம் தெரியாதவர்களை புறக்கணிக்கும், கேவலப்படுத்தும் அல்லது அவர்களை உளவியல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாக்கும் நடவடிக்கைகளை வடகிழக்கில் உள்ள அனைத்து தமிழ் பேசும் அதிகாரிகளும் உறுதிப்படுத்த வேண்டும். வெளிமாகாணங்களுக்கான தொடர்புகளை தவிர்த்து ஏனைய அனைத்து நடவடிக்கைகளையும் எமது தாய்மொழியிலேயே மேற்கொள்ளவேண்டும். ஆங்கில மொழியில் மேற்கொள்ளப்படும் உள்ளக தொடர்பாடல்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் திருப்பி அனுப்பி அதனை புறக்கணிக்க வேண்டும் மொத்தத்தில் வடகிழக்கில் உள்ள அதிகாரிகள் அனைவரும் தமிழில் கடமையாற்ற அனுமதிக்கப்படுவதுடன் தமிழ் மொழியில் கடமையாற்றுவதற்கு தூண்டப்படவேண்டும் இது அவர்களது உரிமை என்பதுடன் உணர்வு சம்பந்தப்பட்ட விடயம் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் புரிந்தகொள்ள வேண்டும்.

வடகிழக்கில் உள்ள உள்ள+ராட்சி சபைகள், மாநகரசபைகள் தற்போது தங்களது நகரங்களை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றன மேற்படி வேலைத்திட்டங்களில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற கொள்கையையும் நடைமுறைப்படுத்த வேண்டும். வர்த்தகர்களுடன் நடைபெறும் கூட்டங்களில் தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறித்து பேசி அவர்களின் ஒத்துழைப்புடன் வர்த்தக நிலையங்களின் பெயர்ப்பலகைகளை சுத்தமான தமிழில் அமைப்பதுடன் மேற்படி தமிழ் சொல்லையே ஏனைய மொழிகளிலும் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதே போன்று வடகிழக்கில் உள்ள அனைத்து தமிழ் பேசும் அதிகாரிகளும் தங்களது தலைமையின் கீழ் உள்ள அலுவலகங்களில் தமிழ் மொழியை வெளிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால் சுமார் ஒருவருட காலத்தில் மேற்படி அலுவலகங்களுக்கு வருகைதரும் மக்கள் அங்கு எழுதப்பட்டிருக்கும் தமிழ் சொற்களை தொடர்ச்சியாக உச்சரிப்பதன் மூலம் எதிர்காலத்தில் மேற்படி தமிழ் சொற்கள் எமது பேச்சுவழக்கு சொல்லாக மாற்றமடையும்.

இதேபோன்று பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்கள் முதலில் தமிழ் சொற்களை பேச்சு வழக்கில் பயன்படுத்த வேண்டும் குறிப்பாக வணக்கம் சொல்லும் நடைமுறையை அனைத்து பாடசாலைகளிலும் அதிபர்கள் நடைமுறைப்படுத்தவேண்டும் எமது தாய்மொழியை பேசுவதால் ஏற்படும் பெருமைகள்,தனித்துவம் போன்றவற்றை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தி தமிழ் மொழியை மெல்ல மெல்ல பேச்சு வழக்கில் கொண்டுவரு வதற்கு ஆசிரியர்கள்,அதிபர்கள் முயற்சிக்கவேண்டும்.

அனைத்து அலுவலகங்களிலும் மொழிபெயர்ப்பு பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டு மாற்று மொழிகளில் வருகின்ற அனைத்தும் மொழி பெயர்க்கப்பட்ட பின்னரே அலுவலகத்தில் உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் அனுப்பிவைக்கப்படவேண்டும்.
குறிப்பாக ஆங்கிலம் ஆங்கிலமாக இருக்கவேண்டும் தமிழ் தமிழாக இருக்கவேண்டும் ஆங்கிலத்திற்குள் தமிழும் தமிழுக்குள் ஆங்கிலத்தையும் சேர்த்து எமது தாயையும், தாய்மொழியையும் களங்கப்படுத்த வேண்டாம்.

குறிப்பாக சொல்லப்போனால் மொழியுரிமையை சட்டம் போட்டு நடைமுறைப்படுத்துவதை விட திட்டம்போட்டு நடைமுறைப்படுத்துவதே சிறந்தவிடயமாகும்.

Tags: , ,

Leave a Reply