உடற்பயிற்சி உபகரணங்களுக்காக மனிதர்கள் அதிகளவு பணத்தைச் செலவிட்டு வருவதாகவும், கொள்வனவு செய்யப்பட்ட உபகரணங்கள் ஒரு சில மாதகாலங்களிற் பாவிக்கப்படாது வீசப்படும் நிலையே அதிக அளவிற் காணப்படுவதாகவும் பல புள்ளி விபரங்கள் எடுத்துக்கூறும் வேளை, வேகமாக, அல்லது சாதாரணமாக நடக்கும் வழக்கம் செலவீனம் மிகவும் குறைந்ததும், உடலை அதிகளவில் ஆரோக்கியமாகவும், அழகாகவும் கவர்ச்சியாகவும் கட்டிக் காக்கும் இயற்கையான உயிரினக் கலை எனவும் ஆய்வுகள் கூறுகிறது.
நடத்தல் எனப்படும் உயிரினக் கலை, இயல்பானதும், சகல இடங்களிலும் எவ்வேளையிலும் கைக்கொள்ளக் கூடியதுமான உடற்பயிற்சி முறையென நவீன ஆய்வுகள் கருதுகின்றன.
சகல வயதினரும் வயதிற்கும் உடலின் சக்தி வல்லமைக்கும் அமையத் தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சியில் ஈடுபடின், இரத்த ஓட்டம் துரிதப்பட்டு ஜீரணத் தொகுதியும் ஊக்குவிக்கப்படும். மற்றைய சகல உடற்பயிற்சிகளும் தரும் பலாபலன்களை, நடைப்பயிற்சியிலும் பெற்றுக் கொள்ளலாமென்று ஆய்வுகள் கூறுகின்றன.
துவிச்சக்கரவண்டியில் மணிக்கு 20 கிலோமீற்றர் வேகத்தில் மூன்று மணிநேரம் பயணிப்பதால் ஏற்படும் பலனை, ஒரு மணி நேர நடைப்பயணத்தில் அடையாலாமென நிரூபிக்கப்பட்டுள்ளது. தினமும் ஒரு மணி நேர நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களின் உடலில் கொழுப்பினதும், சக்கரையினதும் அளவு கணிசமாகக் குறைந்து காணப்படுவதாகவும், உணவுக் கட்டுப்பாட்டுப் பழக்கம் கொண்டவர்கள் மத்தியில் தமணிகள், நாளங்களில் கொழுப்பும், சீனியும் படிவது தவிர்க்கப்படுவதாகவும், உடல் உறவிற்கான இயல்பான விருப்பமும் உணர்வும் காணப்படுவதாகவும் சகல வயதினர் மத்தியிலும் இடம் பெற்ற ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆண் பெண் இணைவிற்கான உணர்வால் சுரக்கப்படும் கோமோன்கள் உடல் உள் உறுப்புக்களில் கொழுப்புப் படிவதையும் தடுத்து மன அழுத்தமற்ற நிலையையும் ஏற்படுத்துகிறது. பொதுவாக நடைப்பயிற்சி Muscles, மூளை போன்றவற்றின் வளர்ச்சிக்கும் உதவிபுரிகிறது. பதினாறு பதினேழு வயது வரை, சில வரையறுக்கப்பட்ட உணவுப் பழக்கம் மூளை வளர்ச்சிக்குத் துணை போவதுபோல், உடற்பயிற்சியும் மனித இனத்தின் மூளை வளர்ச்சிக்கு இணையாக உதவுகிறது.
நவீன உலகில் இரத்த ஓட்டக் கோளாறுகளும், இருதய நோய் உட்பட்ட பல வியாதிகளும் மனிதர்களை வருத்துவதுபோல், ஆண் பெண் உறவிற்காண கவர்ச்சி அற்றுப் போகும் நிலையில் மன உலைச்சலும் மன அழுத்தமும் ஏற்படுவதாகக் கூறும் ஆய்வுகள், வயது முதிர்ந்த காலங்களிலும் நடைப்பழக்கத்தை வழக்கப் படுத்திக் கொள்பவர்கள் மத்தியில் இந்நிலை மிகவும் குறைவாகக் காணப்படுவதாக எடுத்துரைக்கின்றன.
தீவிரமான நடைப்பயிற்சியானது மூளைவளர்ச்சி, மனநிலைவளர்ச்சி மன ஒருமைப்பாடு, மனநிலைஉயர்வு, ஞாபகசக்தி போன்றவற்றை இறுதிவரை ஊக்குவிக்கிறது. நடக்கும் போது உடலில் அதிகளவிலான Endophine,Dopamine போன்ற கோமோன்கள் சுரப்பதால், மனம் மிகவும் சந்தோஷமாகவும் உடல் வலிகளைத்தாங்கும் வல்லமையைப் பெறக்கூடியதாக அமைவதாகவும், அத்தோடு மேற்கூறிய கோமோன்கள் செய்திப் பரிமாற்றத்தில் பங்கு கொள்வதால் மூளைக்கும் உள் உறுப்புக்களுக்குமிடையே தொடர்பு வலுப்பெற்று ஆரோக்கியம் உச்சம் பெறுவதாக ஆய்வுகள் எடுத்து இயம்புகின்றன.
நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் நடக்கும் பழக்கம் சுத்தமான Oxygen வாயுவைப் பகர்வதால், உயிரினத்தின் சகல உயிரணுக்களின் (Cells) வாழ்நாளும் நீடிக்கப்படுகிறது. உடலில் காணப்படும் Stress Hormone ஆன கோட்டிசோல், நடக்கும்போது அகற்றப்படுவதால் உடல் நிறை கட்டுக்குள் வைக்கப்பட்டு ஒல்லியான தோற்றத்தையும் தருகிறது.
நடைப்பயிற்சிக்காக ஒரு சோடி நல்ல காலணிகள் மட்டுமே தேவைப்படுகிறது. வெறும் காலுடன் சிறிது நேர நடக்கும் பழக்கமும் உடலின் உள் உறுப்புக்களை ஊக்குவித்து ஆரோக்கியத்தை ஊக்கப்படுத்துகிறது. கையில் இரண்டு தடிகளைக்கொண்டு நடக்கும் Nordic Walking எனும் கலையும் மூட்டு, இடுப்புவலி கண்டவர்களுக்கு நடைப்பயிற்சியை இலகு படுத்தித் தருகின்றது.
















