அரசியல் முரண்பாடு காரணமாக ஆளும் வர்க்கத்திற்கும் எதிரணிக்கு மிடையே பல கிழமைகளாக நடைபெற்று, எழுபத்தியேழு பேரைக்காவு கொண்ட வீதிமறியற் போராட்டம், நேற்றுக்காலை உடன் படிக்கை கைச்சாத்திடும் நிலையை எட்டியது.
புதிய தேசிய இடைக்கால அரச அலகு, பல எதிர்க்கட்சி அங்கத்தவர்களையும் மந்திரிகளாகக் கொண்டு அமையவுள்ளது. புதிய அரசியல் சீர்திருத்தச் சட்ட அமைப்பானது, 2004 ஆம் ஆண்டில் காணப்பட்ட சட்டதிட்டங்களை ஒத்த நிலையில், மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறைமையை உருவாக்க வழி வகுக்கும். September 2014ற்கு முன் சட்ட திருத்த நடவடிக்கைகள் முடிவுற வேண்டுமென்பது ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. அத்தோடு ஏற்கனவே அறியப்பட்டது போல் ஜனாதிபதித் தேர்தலும், பாராளுமன்றத் தேர்தலும் இந்த வருட முடிவிற்குள் நடாத்தப்படுவதற்கு உடன் பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஜானுகோவிற்ச் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கையைத் தவிர, எதிர்கட்சியினரின் மற்றைய வேண்டுகோள்கள் யாவும் ஒப்பந்தப் பத்திரத்தில் இடம் பிடித்திருந்த போதிலும், ஜானுகோவிற்ச் அமைக்கப்படவிருக்கும் இடைக்கால தேசிய அரசில் மீண்டும் ஜனாதிபதிப் பதவியிலிருப்பது எதிரணியினருக்குப் பொருந்தாத பழுவாக உள்ளது.
ரிமோஷெங்கோவின் விடுதலைக்கான ஒழுங்கு முறைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குற்றஞ்சாட்டப்பட்டு இரண்டு வருடங்களாக சிறைவாசம் அனுபவிக்கும் எதிர்க்கட்சித் தலைவி ரிமோஷெங்கோவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட குற்றங்கள் தண்டனைக் குரியவையல்லவென பாராளுமன்றக் குழு எடுக்கப்போகும் தீர்மானத்தின் பேரில் அவர் விடுதலை செய்யப்படவுள்ளார்.
உக்ரைன் சுதந்திரப் போராளிகளின் குருதியாற்றில் நின்று ரஷ்யா ஆடிய சதுரங்கம், முற்றுப் பெறுமா அல்லது ஒப்பந்தம் சிறிது காலத்தை வென்றெடுக்கும் தந்திரமா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டுமென ஜேர்மன் நாட்டின் ஐரோப்பிய அரசியல் ஆய்வாளர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
















