7 அடி உயர சீன வாலிபர் ஒருவருக்கு 5 அடி உயர காதலி ஒருவருடன் இணைந்த சம்பவம் ஒன்று சீனாவில் நடந்துள்ளது.
சீனாவை சேர்ந்த 7 அடி 5″ உயரமுள்ள Wang Qiang என்பவர் தன்னை புரிந்து கொண்டு காதல் திருமணம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் அணுகுமாறு விளம்பரம் கொடுத்திருந்தார்.
அவருடைய விளம்பரத்தை பார்த்து இரண்டு பேர் மட்டுமே பதில் அனுப்பியிருந்தனர். ஆனால் அவர்களில் ஒருவர் மட்டுமே நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்தார். அவர்தான் 5 அடி 1″ உயர Miss Hong என்பவர்.
இருவரும் கடந்த காதலர் தினத்தில் சீனாவில் உள்ள Hulu Mount Scenic Park என்ற பூங்காவில் சந்தித்து மனம்விட்டு பேசி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதாக தெரிவித்தனர்.
Wang Qiang இதுகுறித்து கூறும்போது, சிறுவயதில் ஏற்பட்ட நோயின் காரணமாக நான் அபரீதமாக வளர்ச்சி அடைந்தேன். அதன்பின்னர் சிகிச்சை செய்து என்னுடைய வளர்ச்சியை டாக்டர்கள் நிறுத்தினர்.
என்னுடைய உயரத்தையும், ஏழ்மையையும் பார்த்து என்னிடம் பழக எந்த பெண்ணும் முன்வரவில்லை. எனவேதான் இணையத்தில் விளம்பரம் கொடுத்தேன். எனது விளம்பரத்தை பார்த்து இரண்டு பேர் பதிலளித்திருந்தாலும், Miss Hong மட்டுமே நேரில் சந்திக்க ஒப்புக்கொண்டார்.
அவரிடம் நிறைய பேசினேன். தற்போது அவரையே திருமணம் செய்ய முடிவு செய்துள்ளேன் என்றார்.
Miss Hong அவர்கள் கூறும்போது, Wang Qiang அவர்கள் கண்டிப்பாக அவருடைய உடல் வளர்ச்சியை போலவே வாழ்க்கையிலும் வளர்ச்சி அடைவார். அவருக்கு உறுதுணையாக இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
இந்த அபூர்வ ஜோடிக்கு திருமணம் செய்து வைக்க Hulu Mount Scenic Park ஊழியர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்கள் சந்தித்த இந்த பூங்காவிலேயே விரைவில் அவர்கள் திருமணம் நடைபெற உள்ளது.
















