நாட்டு மக்களுக்கு பாதகமான எதனையும் அரசசாங்கம் செய்யாது எனவே ஜெனீவா பிரேரணை குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை இளையோர் பாராளுமன்றத்தின் 6ஆவது அமர்வு மஹரகமவில் உள்ள இலங்கை இளையோர் மத்திய நிலையத்தில் நேற்று ஆரம்பமானது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது ஜெனீவா மாநாடு தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. எனினும் அங்கு கொண்டு வரப்படவுள்ள அனைத்து பிரேரணையினையும் எம்மால் உடனடியாக நிறத்த முடியும்.
அதற்கு சர்வதேசம் கேட்பதை நாங்கள் கொடுத்துவிட்டால் பிரச்சினை தீர்ந்து விடும். எனினும் அதனால் நாட்டுக்கு நன்மை கிடைக்குமா என்பது தொடர்பில் சிந்தித்தே அரசாங்கம் தீர்மானங்களை மேற்கொண்டு வருகின்றது. அதனை மீறி நாட்டு மக்களுக்கு பாதகமான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு எமது அரசாங்கம் ஒருபோதும் இணக்கம் தெரிவிக்காது என்றார்.
இதேவேளை, இளையோர் பாராளுமன்றத்தின் 6ஆவது அமர்வில் ஒற்றுமை, அபிவிருத்தி, மனித உரிமைகள் மற்றும் அதனூடாக தற்போதைய இளையோருக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புக்கள் தொடர்பிலேயே கருத்துக்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
















