இலங்கையின் 66 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டம் தொடர்பாக, “மக்கள் இப்போது தான் நிறைவான சுதந்திரத்தை அனுபவித்து வருகிறார்கள்’ என்று
இலங்கையின் 66 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டம் தொடர்பாக, “மக்கள் இப்போது தான் நிறைவான சுதந்திரத்தை அனுபவித்து வருகிறார்கள்’ என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக் தனது சுதந்திரதின உரையின்போது பெருமையுடன் தெரிவித்திருக்கிறார்.
வடக்கு மக்களைக் கேடயமாகப் பயன்படுத்திக்கொண்டு இலங்கை விவகாரத்தில் ஊடுருவ முனைகின்ற வெளி நாட்டுச் சக்திகளுக்கு தாம் ஒருபோதும் இடங்கொடுக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி உறுதிபடத் தெரிவித்திருந்தார்.
கசப்பான அனுபவங்களை மறந்து விடுமாறும் அவர் தமிழ் மக்களைக் கேட்டிருக்கின்றார். இலங்கை சுதந்திரமடைந்த காலந் தொட்டு தமிழ்மக்களின் அனுபவங்கள் அத்தனையும் கசப்பானவையாகவே இருந்து வருகின்றன.
இனிப்பானவை என்று அரசு தமிழர்களுக்குச் சொல்பவை அத்தனையும், விம்பூசிய இனிப்புகளாகவே அமைந்திருக்கின்ற நிலையில் கசப்பான அனுபவங்களே வாழ்வாகிப் போன தமிழ் இனம் இந்தக் கசப்புகளை மறந்தால் அவர்களின் எதிர்கால இருப்புக்கான உத்தரவாதத்தை யார் தருவது?
இலங்கையை ஆண்டுவந்த எந்த அரசாங்கத் தரப்பிலிருந்தும் தமிழர்களின் தாயகபூமி சிதைக்கப்படமாட்டாது என்ற பாதுகாப்பு உத்தரவாதம் தரப்பட்டதா? தமிழினத்தின் செறிவு குறைக்கப் படமாட்டாது என உத்தர வாதம் கிடைக்கப்பெற்றதா? தமிழர் தாயகம் சிங்கள மக்களின் வலிந்த குடியேற்றத்தால் கபளீகரம் செய்யப்படமாட்டாது என அரசால் ஒத்துக் கொள்ளப்பட்டிருக்கிறதா? என்ற வினாக்கள் எல்லாவற்றுக்கும் ஒரே விடை இல்லை என்பதுதான்.
இந்தநிலையில் தமிழ் மக்களுக்கு உவப்பான செய்தி என்று எதையாவது அரசு விட்டு வைத்திருக்கின்றதா என்பதை ஆளுந்தரப்பினர்தான் கூற வேண்டும்.
58,77,78,83 என இனக்கலவரங்கள் உருவானதற்கான காரணம் சிங்களத் தலைமைகள் விரும்பும் வண்ணம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, அவர்கள் தயவில் வாழ்கின்ற இனமாக தமிழர்களையும் மாற்றியமைப்பதற்கான நோக்கமாகத்தானே இருந்திருக்கின்றன.
தமிழர்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதும், அவர்களது சாத்வீகப் போராட்டங்கள் அரசால் அலட்சியப்படுத்தப்டபட்டதும் தான் தமிழ் இளைஞர்கள் ஆயுத மேந்துவதற்கு காரணங்களாயமைந்தன.
இன்று அவர்களது செயற்பாடுகள் முடக்கப்பட்டாலும் இலங்கை அரசாங்கத்தின் கவனத்துக்கும், உலக நாடுகளின் கவனத்துக்கும் இப் போராட்டங்கள் தான்.
தமிழர்களின் விருப்பையும் வேண்டுகோள்களையும் வெளிப்படுத்தி நிற்கின்றன.
தமிழர் தரப்பின் ஜனநாயகப் போராட்ட முயற்சிகள் அனைத்தும் உதாசீனப்படுத்தப்பட்டதற்குப் பின்னர், அது ஆயுதப் போராட்டமாக மாறி, இலங்கையில் இடம்பெற்ற சீரழிவுகள் காரணமாக ஆயுதப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருகின்றோம் என்ற போர்வையில் நிகழ்த்திய கோரஅவலத்துக்கும், இலங்கையின் அரசாங்கங்களே காரணமாக இருந்து வந்திருக்கின்றன.
தமிழர்கள் சிங்கள மக்களை ஆள்வதற்காகப் போராடவில்லை. அவர்களது போராட்டங்கள் எல்லாம் தங்கள் தாயக நிலத்தில் தாங்கள் அமைதியாக வாழ வேண்டும் என்பதற்காகவே இடம் பெற்று வந்துள்ளன; வருகின்றன.
தங்கள் நிலப்பரப்பு பிறரால் கபளீகரம் செய்யப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், தங்கள் சந்ததியினர் இன அடையாளங்களை இழந்துவிடக் கூடாது என்பதற்காகவுமே தமது தாயகத்தில் தன்னாட்சி முறைமையைக் கோரி நிற்கிறார்கள்.
ஜனாதிபதி கூறியது போல குருவிகூட தன் கூட்டில் சுதந்திரமாக வாழுகின்றபோது, தமிழர்கள் தமது தாயகத்தில் சுதந்திரமாக வாழக்கூடாதா என்றுதான் கேட்கிறார்கள்.
தமிழர்களை அடக்கிவைக்க வேண்டும் என்ற மேலாதிக்கச் சிந்தனையை சிங்கள அரசியல்வாதிகள் களைந்தாலே தமிழர்களின் போராட்ட நியாயங்களை உணர்ந்து கொள்ள முடியும்.
தமிழர்களையும் இலங்கையின் சமபிரஜைகளாக ஏற்கின்ற அரசியல் அமைப்பு முறையை அறிமுகப்படுத்துவதற்கான துணிவு தோன்றும். துரதிஷ்டவசமாக ஆட்சியாளர்களுக்கு அத்தகைய சிந்தனைகள் தோன்றாததால் தான் நாடு சீர்கெட்டுக்கிடக்கிறது.
தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களின் செயற்பாடுகளால் தான் இன்று நாடு இரண்டுபட்டுப் போய் நிற்கிறது. நாட்டின் சுதந்திரத்தால் ஏற்படுகின்ற மகிழ்ச்சியைக் கூடத் தமிழ்மக்கள் கொண்டாட முடியாத நிலை காணப்படுகிறது. இலங்கையர் என்ற உணர்வுடன் தேசியக்கொடியை ஏற்றுவதற்கு அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தால் அவர்கள் நிச்சயமாக அதைச் செய்தே இருப்பார்கள். ஆனால் உண்மைகள் அவ்வாறில்லையே.
இந்தநிலையில், வடக்கு மக்களைப் பயன்படுத்தி இலங்கை விவகாரங்களில் உள் நுழைவதற்கு மேற்கு நாடுகள் முயல்கின்றன என ஜனாதி பதி கவலைப்படுவதில் என்ன நியாயம் இருக்கிறது?
ஜனாதிபதி கூட வடக்கு மக்களை வைத்துத்தானே அரசியல் செய்து கொண்டிருக்கிறார். முள்ளி வாய்க்கால் முடிவின் மூலம் தமிழரின் எழுச்சியை அடக்கி விட்ட நாயகனாகத் தன்னை விளம்பரப்படுத்தித் தானே இன்றுவரை சிங்கள மக்களிடம் வாக்கு வேட்டையாடிக்கொண்டிருக்கிறார்.
வடக்கு மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை மீட்டுக் கொடுத்தவர் தான் என்றல்லவா அரசியல் தம்பட்டம் அடிக்கிறார். ஆனால், முள்ளிவாய்க்கால் அவலங்களுடன் ஐ.நா. செயலாளரை இலங்கைக்கு அழைத்து 2009 மே 26 இல் ஐக்கியநாடுகள் அவைச்செயலாளர் நாயகத்துடன் தமிழ்மக்களுக்குப் பிரச்சினை உண்டு :
அவற்றை தீர்த்து வைக்கிறேன் என்று உடன்படிக்கை செய்துவிட்டு அதனை மீறியதால்தானே இலங்கை ஆட்சியாளர்களுக்கு இன்று இந்த நிலை. ஐ.நா. செயலாளர் நாயகத் துக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டன.
2012, 2013ஆம் ஆண்டுகளில் மனித உரிமைகள் சபையில் இலங்கையின் நிலைமைகள் பற்றி ஆராயப்பட்டு மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக உலகநாடுகள் கொடுத்த வாய்ப்புகளும் இலங்கை அரசால் புறந்தள்ளப்பட்டன.
வெளிநாடுகளிலிருந்துப் பணத்தைப் பெற்று வீதிகளை அபிவிருத்தி செய்து தனது ஆட்சி அதிகாரங்களைப் பலப்படுத்துவதிலும், ஆளும் இனக் குடிமக்களை தமிழர் பகுதிகளில் குடியேற்றுவதிலும், புத்தர் சிலைகளை வீதிக்குவீதி அமைப்பதிலும் கவனம் செலுத்தி வருகின்ற அரசு, தமிழர்களின் உள்ளக் குமுறல்களைப் புரிந்து கொள்ளாமலேயே தொடர்ந்தும் இயங்கி வருகிறது.
தமிழர்களுடைய போராட்டம் இலங்கை ஆட்சியாளர்களின் கடுமையான போக்குக்கெதிரானதே. ஆட்சியாளர்கள் தமது கடுமையான போக்கைக் கைவிட்டுத் தமிழர்களையும் இணைத்துச் செயற்பட முன்வருவார்களேயானால் தமிழர்களும் இணைந்து செயல்படக் காத்திருக்கிறார்கள்.
அதற்கான வழி புதிய ஆட்சிமுறைமை ஒன்றை ஏற்படுததுவதுதான். இலங்கையில் தமிழர்களின் வாழ்வுக்கு இனிமேல் அச்சமில்லை என்ற நல்லெண்ணத்தை சிறப்பான ஆட்சி முறையின்மூலம் விதைப்பதுதான்.
ஆனால், இலங்கை ஆட்சியாளர்கள் இவை எவற்றுக்கும் தயாராக இல்லை. தமிழர்கள் தமது நடைமுறைகளைப் பணிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்ப்பார்க்கிறார்கள்.
எங்கள் பிரச்சினைகளுக்கு உள்நாட்டிலேயே பேசி எங்களால் முடிவு காண முடியும் என்று உலகத்துக்குச் சொல்லிக் கொண்டு, தமிழர்களின் உறுதியைக் குலைத்து விடலாம் என எதிர்ப்பார்க்கிறார்கள்.
ஏமாற்றுத்தனங்களால்தான் இலங்கை அரசு மூன்றாவது தடவையாகவும் ஜெனிவாவில் சிக்கலுக்குள்ளாகும் நிலையில் இருக்கிறது. ஏற்கனவே இருதடவைகள் இலங்கைக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தையும் நல்லெண்ணத்தையும் இலங்கை அரசு சரிவரப் பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு உலகமன்றில் பூதாகரமாக எழுந்து நிற்கிறது.
இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டிய சூழலே உருவாகி வருகிறது. இலங்கை தொடர்பாக ஐக்கியநாடுகளவையின் நிபுணர்குழு வெளியிட்ட அறிக்கையை தனிநபர் அறிக்கையயன இலங்கை அரசு கேலி செய்தது.
தானே நியமித்துப் பெற்றுக்கொண்ட கற்றுக்கொண்ட பாடங்கள் தொடர்பான அறிக்கையையும் கிடப்பில் போட்டுவிட்டது. இலங்கையில் மனிதஉரிமைகள் மேம்பாடு பற்றியும், செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் பற்றியும் ஆராய்வதற்காக இலங்கை வந்திருந்த மனித உரிமைகள் ஆணையாளர் நவிப்பிள்ளையை இலங்கை அரசு சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
மாறாக அவரை அவமதிக்கும் வகையில் செயற்பட்டது. அதன்பின்னர் இலங்கைக்கு யார்யாரோ எல்லாம் வந்தார்கள் : சென்றார்கள். தற்போது கூட ஐக்கிய நாடுகள் அவையின் உதவிச்செயலாளர் நாயகம் ஹாவோ லியாங் ஸு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஆனால் இலங்கை அரசு தான் கூறுபவற்றைச் சரியயன்று ஏற்றுக்கொள்பவர்களைத் தவிர அனைத்து இராஜதந்திரிகளையும் தலைவர்களையும் நிராகரித்து வருகின்ற போக்கையே கடைப்பிடிக்கிறது.
இம்முறை இலங்கைக்கு உதவப்போவதில்லை என்பதை இந்தியா தெளிவாகவே கூறி விட்டது. இலங்கை சார்பாகக் கடந்த காலங்களில் செயல்பட்ட நாடுகளுக்குத் தமது பிரேரணையின் நியாயங்களை எடுத்துச் சொல்வதற்காக பிரிட்டனும் அமெரிக்காவும் இப்போதே களத்தில் இறங்கிவிட்டன.
வடமாகாண சபையின் போர்க்குற்ற விசாரணைக்கான தீர்மானம் சர்வதேச அரங்கில் இலங்கை ஆட்சியாளர்களுக்கு பெரும்தாக்கத்தை ஏற்படுத்தலாம் என நம்பப்படுகிறது.
புலம்பெயர் தமிழர்களின் பரப்புரைகளும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகளும் இம்முறை இலங்கைக்குக் கடுமையான விளைவு களைத் தர வல்லனவாக அமைகின்றன.
இந்தநிலையில் இலங்கையின் நிலைமை கவலைக்கிடமாகவே இருக்கிறது. உலக அரங்கில் சிறுமைப்படுவது அப்படியயான்றும் கஷ்டமான விடயமல்ல என்று இலங்கை தன்னைத்தானே தேற்றிக் கொள்ளவும் கூடும்.
எவ்வாறெனினும் இலங்கை ஜெனிவா விடயத்தில் நிச்சயம் பணிந்தே தீரவேண்டும் என்பதுதான் இன்றைய யதார்த்தம்.
















