உலகம் அழியப்போகிறது. இரண்டாக பிளந்து கடலில் சங்கமமாகி விடும். அதன்பின் புதிய உலகம் உருவாகும். பச்சைப்பசேல் என எங்கும் காணலாம். புதிய கடவுள் அவதாரம் எடுப்பார். ஆதாம், ஏவாள் போல புதிதாக இருவர் தோன்றுவர்;அவர்களால் தான் மீண்டும் மனித இனம் உயிர்ப்பிக்கப்படும். அப்பாடா, ஏதோ விட்டலாச்சார்யா படக்கதை போல இருக்கிறதா? இது உண்மையாக பல நிபுணர்கள் கூடி, கணக்கு போட்டு, கணித்து பெப்ரவரி22 ம் திகதி…அதான் நேற்றுமுன்தினம் உலகத்தின் கடைசி நாள் என்று அறிவித்தனர்.
ஆனால், அது நடக்கவில்லை என்பது தெரிந்தது தானே. கடந்தாண்டு மாயன் காலண்டர் அடிப்படையில் ஒரு கட்டுக்கதை, கற்பனை வெளியானது. கடந்தாண்டு டிசம்பர் 21 ம் திகதி உலகம் அழிந்து விடும் என்று. அது பொய்த்துப்போனது. இந்த முறை நோர்ஸ் இனத்தவர் கணித்த கற்பனை கட்டுக்கதையாகிப்போனது; உலகம் அப்படியே தான் இருக்கிறது.
யார் இந்த நோர்ஸ் இனத்தவர்? மாயன் போல இவர்களும் இப்படி கிளம்பி விட்டார்களே என்று தோன்றும். இவர்களுக்கு பெரும் நூற்றாண்டு பின்னணி உண்டு.
பிரிட்டனில் பல நூற்றாண்டுகளுக்கு முன் யார்க் பகுதியை மையமாக வைத்து நோர்ஸ் அரச வம்சத்தினர் இருந்ததாக புராண கருத்துக்கள் உள்ளன. யார்க் பழம்பெரும் நகரம். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜோர்விக் வைகிங் விழா கொண்டாடுவர். நோர்ஸ் புராண நம்பிக்கை உள்ளவர்கள் பிரிட்டன் முழுவதும் உள்ளனர். இவர்களும் ஒரு வகையில் கிறிஸ்தவர்கள் தான்.
எனினும், இவர்கள் வழிபடும் முறை, பின்பற்றும் பாணி தனி. இவர்கள் கடவுள் ஹெய்ம்டலார். வேறு சில கடவுள்களும் உள்ளனர். இவர்கள் எல்லாரும் கையில் கோடரி, சம்மட்டி வைத்திருப்பர். அதுபோல வழிபாட்டு தலத்தில் உலகம் அழியும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. கடந்த 15 ம் திகதியில் இருந்து 23 ம் திகதி வரை விழா கொண்டாடுகின்றனர். இன்றுடன் இந்த விழா முடிகிறது. இந்த நோர்ஸ் புராணம் கணிப்பு பற்றி ஒவ்வொரு ஆண்டும் உலகம் அழிந்து தங்கள் கடவுள் மூலம் புதிய உலகம் படைக்கப்படும் என்று இந்த இனத்தவர் அறிவிப்பர்.
கடந்த பல ஆண்டாகவே இப்படி ஒவ்வொரு ஆண்டு விழாவின் போதும் இப்படி உலகம் அழியும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஆனால், அப்படி நடக்கவே இல்லை. இந்த முறையும் அப்படி தான் நடந்தது. விழாவை நடத்தும் நோர்ஸ் இன பெரியவர்கள் கூறுகையில், ‘நாங்கள் கணித்தது எல்லாம் சரி தான். ஆனால்,இந்தாண்டு பெப்ரவரி 22 இல்லையேல், அடுத்தாண்டு கூட நடக்கலாம்.
அதற்கான அறிகுறிகள் தான் திடீர் பனிப்புயல், சுனாமி, வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகள் எல்லாம் என்கின்றனர். யார்க் நகரில் உள்ள நோர்ஸ் கோயில் கூரையில் இருந்து திடீரென பெரும் சப்தம் எழுமாம். பல நூற்றாண்டுக்கு முன் இப்படி தான் இங்கு சத்தம் எழுந்ததாம். நோர்ஸ் கடவுள் தான் இப்படி சத்தம் எழுப்பியுள்ளாராம். இப்போதும் அப்படி கடவுள் சப்தம் வரும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த முறை அப்படி சத்தம் எழவில்லை.
அதனால் உலகம் அழியவில்லை என்று இவர்கள் கூறியுள்ளனர். ஒரு பக்கம் சிரிப்பு வருது என்றாலும், இவர்கள் சீரியசாகவே இந்த நிகழ்வை எதிர்பார்க்கின்றனர். ‘ஒரு நாள் பாருங்கள், உலகின் ஒரு பகுதி திடீரென பிளக்கும். அப்போது நாங்கள் சொன்னது உண்மை என்று புரியும் என்று பயமுறுத்துகின்றனர் நோர்ஸ் இனத்தவர்.
















